ஈராக் போராட்டத்தில் வன்முறை; துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி; 6 பேர் படுகாயம்


ஈராக் போராட்டத்தில் வன்முறை; துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி; 6 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 4 Sep 2018 11:30 PM GMT (Updated: 4 Sep 2018 7:25 PM GMT)

பஸ்ரா நகரில் நேற்று முன்தினம் இரவு உள்ளூர் மக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர்.

பஸ்ரா,

ஈராக் நாட்டில் நன்றாக வாழ்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும், ஊழலை ஒழிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஸ்ரா நகரில் நேற்று முன்தினம் இரவு உள்ளூர் மக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர்.

அப்போது போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது.

இதன் காரணமாக அமைதியாக தொடங்கிய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. பாதுகாப்பு படையினர் மீது போராட்டக்காரர்கள் கற்களையும், பெட்ரோல் குண்டுகளையும் வீசினர்.

பதிலுக்கு போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்தனர். மேலும் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த மோதலில் போராட்டக்காரர்களில் ஒருவர் பலி ஆனார். 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அங்கு இருந்து மீட்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஈராக் மனித உரிமை கமி‌ஷன் தலைவர் மஹ்டி அல் டாமினி வலியுறுத்தி உள்ளார்.  இது குறித்து அவர் விடுத்து உள்ள அறிக்கையில், ‘‘ இந்த மோதல்கள் தொடர்பாக உடனடியாக நீதி விசாரணை நடத்த  வேண்டும். போராட்டக்காரரை நோக்கி தோளில் சுட்டு உள்ளனர். அவருக்கு மின்சார அதிர்ச்சியும் கொடுக்கப்பட்டு உள்ளது’’ என கூறி உள்ளார்.

ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமையன்று பஸ்ரா மாகாண அரசு தலைமைச்செயலகத்துக்குள் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் நுழைய முற்பட்டபோதும், அவர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது நினைவுகூரத்தக்கது.

Next Story