பாகிஸ்தானில் 3 அல் கொய்தா பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


பாகிஸ்தானில் 3 அல் கொய்தா பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 25 Jun 2019 10:15 PM GMT (Updated: 25 Jun 2019 7:58 PM GMT)

பாகிஸ்தானில் 3 அல் கொய்தா பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் உள்ள குடா பக்ஸ் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவ வீரர்களுக்கு உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்தது. அதன் பேரில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்குள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வீட்டை சுற்றிவளைத்து, பயங்கரவாதிகளை சரணடைந்துவிடும்படி எச்சரித்தனர். ஆனால் அதற்கு செவிசாய்க்காத பயங்கரவாதிகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

அதனை தொடர்ந்து, போலீசார் தங்களது துப்பாக்கிகளால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் 3 பேரும் அல் கொய்தா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. சம்பவ இடத்தில் இருந்து, வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர்.


Next Story