வடகொரியாவில் காலடி வைத்தார் டிரம்ப் - கிம்முடன் உற்சாக சந்திப்பு


வடகொரியாவில் காலடி வைத்தார் டிரம்ப் - கிம்முடன் உற்சாக சந்திப்பு
x
தினத்தந்தி 30 Jun 2019 7:48 AM GMT (Updated: 30 Jun 2019 7:22 PM GMT)

வடகொரியாவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முதன்முதலாக காலடிவைத்தார். அவர் அந்த நாட்டின் தலைவர் கிம்மை உற்சாகத்துடன் சந்தித்து பேச்சு நடத்தினார்.

சியோல்,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் பரம எதிரிகளாக திகழ்ந்தனர். ஆனால், சற்றும் எதிர்பாராத வகையில் அவர்கள் தங்கள் பகைமையை மறந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி, சந்தித்து பேசி உலக நாடுகளையெல்லாம் வியக்க வைத்தனர். கொரியாவை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவோம் என ஒப்பந்தம் செய்தனர்.

ஆனால் இந்த ஆண்டு, பிப்ரவரி மாதம் 27-ந் தேதியும், 28-ந் தேதியும் வியட்நாம் நாட்டின் தலைநகரான ஹனோயில் டிரம்பும், கிம்மும் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதைத் தொடர்ந்து இரு தலைவர்களும் எதிர்காலத்தில் சந்திப்பார்களா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி-20 உச்சி மாநாட்டில் டிரம்ப் கலந்துகொண்டு விட்டு தென்கொரிய தலைநகர் சியோலுக்கு நேற்று முன்தினம் சென்றார். முன்னதாக அவர் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.

அந்தப்பதிவில் அவர், “சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு உள்ளிட்ட மிக முக்கியமான சந்திப்புகளை நடத்திவிட்டு, ஜப்பானில் இருந்து தென்கொரியாவுக்கு புறப்படுகிறேன் (அதிபர் மூன் ஜே இன்னுடன்). அங்கு நான் இருக்கும்போது, வட கொரியாவின் தலைவர் கிம் இதைப் பார்த்தால், நான் அவரை எல்லையில் ராணுவம் விலக்கப்பட்டுள்ள பகுதியில் சந்திப்பேன். அவருடன் கை குலுக்குவேன். ஹலோ சொல்லுவேன்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த யோசனை, நல்ல யோசனை என வடகொரியா கருத்து தெரிவித்தது. ஆனாலும் இரு தலைவர்கள் சந்திப்பு நடக்குமா, நடக்காதா என்ற பரபரப்பு நிலவியது.

இந்த பரபரப்பை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் வட, தென் கொரியாக்களின் எல்லையில் ராணுவம் விலக்கப்பட்டுள்ள பகுதியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வட கொரிய தலைவர் கிம்மும் நேற்று மதியம் சந்தித்தனர். இருவரும் உற்சாகமாய் கை குலுக்கி கொண்டனர். அதைத் தொடர்ந்து டிரம்ப், சில அடி தூரம் வடகொரியாவினுள் சென்றார். பின்னர் இருவரும் தென் கொரியாவினுள் வந்தனர்.

எல்லைக்கோட்டின் மீது டிரம்ப் காலடி வைத்தபோது அவரிடம் கிம், “எல்லைக்கோட்டின் மீது கால் வைத்த முதல் அமெரிக்க ஜனாதிபதி நீங்கள்தான். இது ஒரு துரதிருஷ்டவசமான எதிர்காலத்தை தடுப்பதற்கான உங்கள் விருப்பத்தை பிரதிபலிக்கிறது” என கூறினார்.

அதற்கு டிரம்ப், “இந்த நாள் உலகத்துக்கு ஒரு மகத்தான நாள். எல்லையில் அடியெடுத்து வைப்பது ஒரு பெரிய மரியாதை. நிறைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உண்மையில் நிறைய விஷயங்கள் சாதகமாக நடக்கின்றன” என குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து எல்லையின் தென்பகுதியில் பான்முன்ஜோமில் அமைந்துள்ள சுதந்திர மாளிகையில் டிரம்பும், கிம்மும் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்காக அமர்ந்தபோது கிம், “வடக்கு மற்றும் தெற்கு பிரிவின் சின்னமாக இருந்த ஒரு இடத்தில் நமது கை குலுக்கல் நடந்தது. இது கடந்த காலத்தை நாங்கள் மறந்து விட தயாராக இருக்கிறோம் என்பதை காட்டியது” என குறிப்பிட்டார்.

இந்த பேச்சுவார்த்தையின்போது, அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ, நிதி மந்திரி ஸ்டீவன் மனுசின், டிரம்பின் மகள் இவாங்கா, மருமகனும், ஆலோசகருமான ஜாரட் குஷ்னர் ஆகியோர் உடன் இருந்தனர்.

அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பாக பணிக்குழுக்கள் அமைத்து பேச்சுவார்த்தையை தொடங்க ஒப்புக்கொண்டனர்.

பேச்சுவார்த்தையின் முடிவில் கிம்மிடம் டிரம்ப், “உங்களுடன் இருந்தது எனக்கு கவுரவம். எல்லைக்குள் வருமாறு கூறியது மரியாதை. நான் எல்லை கடந்து வந்ததில் பெருமிதம் அடைகிறேன். உங்களுடன் இருந்ததை ரசித்தேன். மிகவும் நன்றி” என குறிப்பிட்டார்.

சந்திப்புக்கு பின்னர் டிரம்ப், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “நான் சமூக ஊடகத்தில் அறிவிப்பு வெளியிட்டபோது, நீங்கள் (வடகொரியா) அதை ஊடகத்திடம் காட்டாமல் இருந்திருந்தால் மோசமாக போய் இருக்கும். எனவே நீங்கள் நம் இருவரையும் அழகாக்கினீர்கள். இதற்காக பாராட்டுகிறேன். கிம்முடன் எனக்கு நல்லதொரு உறவு ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.

மேலும், “வடகொரியா மீதான பொருளாதார தடைகளை விலக்கி விட வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். ஆனால் இது அதற்கான தருணம் அல்ல. அவை தொடரும். ஆனால் அவற்றை விலக்கி விட எதிர்நோக்கி உள்ளேன். இந்த நாட்டின்மீது பொருளாதார தடைகளை நான் விரும்பவில்லை. வரவிருக்கும் மாதங்களில் அமெரிக்கா மற்றும் வடகொரியா பணிக்குழுக்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறபோது பொருளாதார தடைகளை நீக்குவது பற்றி பேசப்படும். அப்போது ஒரு கட்டத்தில் இதெல்லாம் நடக்கலாம்” என குறிப்பிட்டார்.


Next Story