அமெரிக்காவில் உலக புகழ்பெற்ற மலையேற்ற வீரர் சாவு - மலை உச்சியில் இருந்து தவறி விழுந்தார்


அமெரிக்காவில் உலக புகழ்பெற்ற மலையேற்ற வீரர் சாவு - மலை உச்சியில் இருந்து தவறி விழுந்தார்
x
தினத்தந்தி 29 Nov 2019 11:00 PM GMT (Updated: 29 Nov 2019 10:15 PM GMT)

அமெரிக்காவில் உலக புகழ்பெற்ற மலையேற்ற வீரர் ஒருவர், மலை உச்சியில் இருந்து தவறி விழுந்ததால் உயிரிழந்தார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவை சேர்ந்த பிரபல மலையேற்ற வீரர் பிராட் கோப்ரைட் (வயது 31). இவர் எந்த வித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் மலையேறுவதில் வல்லவர். இதனால் இவர் உலகம் முழுவதும் பிரபலமான மலையேற்ற வீரராக திகழ்ந்து வந்தார்.

கடந்த 2017-ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள உலகின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றான ‘எல் கேப்டன்’ சிகரத்தில் எந்த வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி மிக குறுகிய நேரத்தில் ஏறி சாதனை படைத்தார்.

இந்த நிலையில் பிராட் கோப்ரைட் மற்றும் அவரது நண்பரும், சக மலையேற்ற வீரருமான அய்டன் ஜேக்கப்சன் ஆகிய இருவரும் மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ‘எல் பொட்ரெரோ சிக்கோ’ மலையில் ஏறினர்.

அப்போது பிராட் கோப்ரைட் மலையின் உச்சியை அடைந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் ஆயிரம் அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அதே போல் அய்டன் ஜேக்கப்சனும் மலையில் இருந்து தவறி விழுந்தார். ஆனால் அவர் குறைவான உயரத்தில் இருந்து விழுந்ததால் காயங்களுடன் உயிர் தப்பினார். பிராட் கோப்ரைட் இறப்புக்கு உலகம் முழுவதிலும் உள்ள மலையேற்ற வீரர்கள் அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ளனர்.


Next Story