நியூசிலாந்தில் பைசர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் பலி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 30 Aug 2021 7:33 PM GMT (Updated: 30 Aug 2021 7:33 PM GMT)

நியூசிலாந்தில் பைசர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் ஒருவர் பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வெலிங்டன், 

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலகம் முழுவதும் பல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்தாலும் அமெரிக்காவில் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது என பரவலாக நம்பப்படுகிறது.

இந்த தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படுவது மிக மிக குறைவு என்பதால் உலக நாடுகள் பலவும் இந்த தடுப்பூசியை அமெரிக்க நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்து தங்கள் மக்களுக்கு வழங்கி வருகின்றன. அந்த வகையில் 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்திலும் பைசர் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் நியூசிலாந்தில் பைசர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது நியூசிலாந்தில் கொரோனா தடுப்பூசியால் நிகழ்ந்த முதல் மரணம் ஆகும். இதுகுறித்து நியூசிலாந்தின் கொரோனா தடுப்பூசி கண்காணிப்பு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "பைசர் தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் மாரடைப்பு நோயால் இறந்தார். தடுப்பூசியின் காரணமாக அந்தப் பெண்ணுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்கலாம். அதே சமயம் அவருக்கு வேறு சில மருத்துவ பிரச்சினைகளும் இருந்திருக்கக் கூடும் என நம்பப்படுகிறது" எனக் கூறப்பட்டுள்ளது.

Next Story