தரையில் இருந்து சென்று நடுவானில் விமான பயணியை தாக்கிய துப்பாக்கி தோட்டா


தரையில் இருந்து சென்று நடுவானில் விமான பயணியை தாக்கிய துப்பாக்கி தோட்டா
x

Image Courtesy: cabin_crew_club

மியான்மரில் தரையில் இருந்து சென்ற துப்பாக்கி தோட்டா தாக்கியதில் நடுவானில் விமானத்தில் பறந்த வாலிபர் படுகாயம் அடைந்து உள்ளார்.


நைபிடா,


மியான்மர் நாட்டின் நேசனல் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் ஏ.டி.ஆர்.-72 ரக விமானத்தில் 27 வயது வாலிபர் ஒருவர் நைபிடா நகரில் இருந்து லோய்காவ் நோக்கி சென்றுள்ளார். அந்த விமானத்தில் 63 பயணிகள் இருந்துள்ளனர்.

விமானம் லோய்காவ் நகரை நெருங்கியபோது, தரையில் இருந்து 3 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென தரையில் இருந்து சுடப்பட்ட துப்பாக்கியில் இருந்து பாய்ந்த தோட்டா ஒன்று விமானத்தில் ஊடுருவி வாலிபரின் மீது பாய்ந்து உள்ளது.

இதில் அவரது முகத்தின் வலது புறம் காயம் ஏற்பட்டு உள்ளது. இதுபற்றிய புகைப்படமும் வெளிவந்து உள்ளது. அதில், விமானம் தோட்டாவால் துளைக்கப்பட்ட மற்றும் காயமடைந்த வாலிபரின் காட்சிகள் ஆகியவை இடம் பெற்று உள்ளன.

விமானம் தரையிறங்கியதும் உடனடியாக வாலிபர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இதனை தொடர்ந்து மியான்மர் நாட்டு ராணுவ படைகள் சம்பவம் நடந்த விமான நிலையம் அருகே குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளன.


Next Story