உளவு பார்த்த விவகாரம்; அமெரிக்க நிருபரின் வழக்கை கோர்ட்டு முடிவு செய்யும்: பிளிங்கனுக்கு லாவ்ரவ் பதில்


உளவு பார்த்த விவகாரம்; அமெரிக்க நிருபரின் வழக்கை கோர்ட்டு முடிவு செய்யும்:  பிளிங்கனுக்கு லாவ்ரவ் பதில்
x

ரஷியாவில் உளவு பார்த்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அமெரிக்க பத்திரிகை நிருபரின் வழக்கை கோர்ட்டு முடிவு செய்யும் என அந்தோணி பிளிங்கனிடம் தொலைபேசி வழியே லாவ்ரவ் தெரிவித்து உள்ளார்.



செயின்ட் பீட்டர்ஸ்பர்க்,


உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரானது தொடர்ந்து, இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்து நீடித்து வருகிறது. ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் எடுத்து வருகின்றன.

போரை நிறுத்த கோரும் அந்நாடுகள், மறுபுறம் உக்ரைனுக்கு ஆயுதம், நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்கி போரை ஊக்கப்படுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டை அதிபர் புதின் முன்வைத்து உள்ளார்.

இந்நிலையில், போர் சூழலை பற்றி செய்தி சேகரிக்க சென்ற பிரபல அமெரிக்க பத்திரிகை நிருபர் ஒருவர், உளவு பார்த்த குற்றச்சாட்டில் ரஷியாவில் வைத்து கைது செய்யப்பட்டு உள்ளார்.

அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையை சேர்ந்த ஈவான் கெர்ஷ்கோவிச் என்ற நிருபரை ரஷியா கைது செய்து உள்ளது. இதுபற்றி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து உள்ளது. நிருபரின் உயிர்பாதுகாப்பு பற்றி கவலை தெரிவித்து உள்ளது.

ரஷியாவின் மத்திய பாதுகாப்பு துறை எனப்படும் எப்.எஸ்.பி. என்ற உளவு அமைப்பு வெளியிட்ட செய்தியில், யெகாடரீன்பர்க் மாகாணத்தில், உரால் மலைப்பிரதேச பகுதியில் வைத்து வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை நிருபர் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்க தரப்பு உத்தரவின்படி ஈவான் செயல்பட்டு, ரஷிய ராணுவத்தின் தொழில் வளாகத்தில் உள்ள நிறுவனங்களில் ஒன்றின் செயல்பாடுகள் பற்றி ரகசிய தகவல்களை சேகரித்து உள்ளார் என தெரிவித்து உள்ளது.

இந்த தகவலை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை வெளியிட்டு உள்ளது. இதனை அல்-ஜசீரா செய்தி நிறுவனமும் உறுதி செய்து உள்ளது.

எனினும், உக்ரைனுக்கு எதிரான போர் மற்றும் ரஷியாவின் வாக்னர் என்ற கூலிப்படை அமைப்பு ஆகியவற்றை பற்றி அவர் செய்தி சேகரித்து வந்துள்ளார் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.

இந்த உளவு குற்றச்சாட்டில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டால், ஈவானுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க கூடும்.

உக்ரைனுக்கு எதிராக போர் தொடங்கியதில் இருந்து, முதன்முறையாக அமெரிக்க செய்தி நிறுவன பத்திரிகையாளர் ஒருவர் ரஷியாவில் வைத்து உளவு குற்றச்சாட்டுக்கான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு உள்ளார் என்றும் அல்-ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கன், ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரவை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில், அமெரிக்க பத்திரிகை நிருபரின் கைது ஏற்று கொள்ள முடியாதது என ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து உள்ளார்.

அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று லாவ்ரவிடம் கேட்டு கொண்டார். இதனை அமெரிக்க வெளியுறவு துறையின் முதன்மை துணை செய்தி தொடர்பாளர் வேதாந்த் பட்டேல் தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி ரஷிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், அமெரிக்க நாட்டை சேர்ந்த நபரின் சட்டவிரோத செயல்களுக்கான சான்றுகள் வெளிவந்த நிலையில், அவரது வருங்காலம் பற்றி கோர்ட்டு முடிவு செய்யும்.

அவரது கைது நடவடிக்கை பற்றி மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு உரிய தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது என்று தெரிவித்து உள்ளது.

நிருபருக்கான அந்தஸ்து என்ற பெயரில், ஒரு நாட்டின் ரகசிய விசயங்கள் உள்ளடங்கிய தகவல்களை அவர் சேகரித்து உள்ளார். ரகசிய தரவுகளை பெறும்போது, தக்க தருணத்தில் அவர் கைது செய்யப்பட்டு உள்ளார் என லாவ்ரவ் வலியுறுத்தி தெரிவித்து உள்ளார்.

இதில், ரஷிய அதிகாரிகளின் முடிவானது சட்டத்திற்கு உட்பட்டும், சர்வதேச அளவிலான ரஷியாவின் உள்ளார்ந்த ஈடுபாட்டுடனும் நடைபெறும். அதனை மதிக்க வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு உள்ளது என பிளிங்கனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது என்றும் ரஷிய அமைச்சகம் தெரிவித்து உள்ளது.


Next Story