கனடா: இந்து கோவில் மீது வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையில் வாசகம்; போலீசார் விசாரணை


கனடா:  இந்து கோவில் மீது வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையில் வாசகம்; போலீசார் விசாரணை
x

கனடாவின் வின்ட்சார் நகரில் இந்து கோவில் மீது கருப்பு மை பூசப்பட்டு, வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையிலான வாசகங்கள் எழுதப்பட்டு உள்ளன என நகர போலீசார் தெரிவித்து உள்ளனர்.

டொரண்டோ,

வெளிநாடுகளில் வசித்து வரும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் மீது தாக்குதல் நடத்தப்படுவது கடந்த ஆண்டில் அதிகரித்து இருந்தது. இந்நிலையில், நடப்பு ஆண்டில் இந்து மத ஸ்தலங்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

புது வருடம் தொடங்கியது முதல், ஆஸ்திரேலியா நாட்டில் மதவெறி சார்ந்த தாக்குதல்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இதன்படி, மெல்போர்ன் நகரில் மில் பார்க் என்ற இடத்தில் சுவாமி நாராயண் இந்து கோவில் மீது கடந்த ஜனவரி 12-ந்தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தி, இந்தியாவுக்கு எதிரான வாசகங்களையும் அதில் எழுதி இருந்தது பரபரப்பு ஏற்படுத்தியது.

கோவிலின் சுவர் மீது இந்தியா ஒழிக என பொருள்படும் வகையிலான இந்துஸ்தான் முர்தாபாத் என வர்ணம் பூசி உள்ளனர். இந்துக்கள் மீது வெறுப்பை உமிழும் இந்த செயல்களால், பல்வேறு இந்தியர்கள் மற்றும் சீக்கிய தலைவர்களும் வருத்தம் அடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, கடந்த ஜனவரி 16-ந்தேதி மற்றொரு இந்து கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் தெரிய வந்தது. கேரம் டவுன்ஸ் நகரில் உள்ள சிவ விஷ்ணு கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருந்தது. இந்தியாவுக்கு எதிரான வாசகங்களும் அதில் எழுதப்பட்டு உள்ளன.

ஆல்பர்ட் பூங்கா பகுதியில் உள்ள இந்து கோவிலான இஸ்கான் கோவில் மீது கடந்த ஜனவரி 23-ந்தேதி இந்தியாவுக்கு எதிரான மற்றும் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்டு, அவமதிப்பு செய்யப்பட்டு இருந்தது.

கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற இந்து கோவிலான கவுரி சங்கர் கோவிலில் கடந்த ஜனவரி இறுதியில், இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டு காணப்பட்டன. இதற்கு டொரண்டோ நகரில் அமைந்துள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்தது.

இதன்பின் நிலைமை சற்று சீரானது. இந்த நிலையில், கனடாவின் வின்ட்சார் நகரில் உள்ள இந்து கோவில் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

அந்த கோவிலின் வெளிப்புற சுவரின் மீது கருப்பு மை தெளித்து, இந்துவுக்கு எதிரான மற்றும் இந்தியாவுக்கு எதிரான வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையிலான வாசகங்கள் எழுதப்பட்டு உள்ளன. இதனை வின்ட்சார் நகர போலீசார் கண்டறிந்து உள்ளனர்.

இதனை அவர்கள் தெரிவித்து உள்ளதுடன், இந்த சம்பவத்தில் 2 பேர் தேடப்பட்டு வருகின்றனர் என கூறியுள்ளனர். இதன்படி, சம்பவம் நேற்றிரவு 11 மணி முதல் அதிகாலை 1 மணிக்குள் நடந்திருக்க கூடும் என தெரிவித்தனர். அதுபற்றிய வீடியோவும் வெளியிடப்பட்டது.

அதில், முழுவதும் கருப்பு உடையில், முகங்களை மூடியபடி இரண்டு பேர் வருகின்றனர். அவர்களில் ஒருவர் தொலைவில் நின்றபடி யாரேனும் வருகிறார்களா? என கவனித்தபடியும் மற்றொரு நபர், விரைவாக சுவற்றில் கருப்பு மை கொண்டு எழுதும் காட்சிகளும் இடம் பெற்று உள்ளன.


Next Story