உக்ரைனுக்கு எதிரான போர்... நீடிக்க வேண்டும் என்பதே சீனாவின் விருப்பம்; சந்தேகம் கிளப்பிய நிபுணர்கள்


உக்ரைனுக்கு எதிரான போர்... நீடிக்க வேண்டும் என்பதே சீனாவின் விருப்பம்; சந்தேகம் கிளப்பிய நிபுணர்கள்
x

உக்ரைனுக்கு எதிராக ரஷியா போரிட்டு கொண்டே இருக்க வேண்டும் என்பதே சீனாவின் விருப்பம் என அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

பீஜிங்,

உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் இணைவதற்கு ரஷியா நீண்டகால எதிர்ப்பு தெரிவித்து வந்தது. எனினும், உக்ரைன் தனது முயற்சியை நிறுத்தவில்லை. இது ரஷியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்ற சூழலில், ராணுவ நடவடிக்கை என்ற பெயரில், கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி உக்ரைன் மீது ரஷியா படையெடுத்தது.

போரின் விளைவால் கச்சா எண்ணெய் விலை உயர்வு, விலைவாசி அதிகரிப்பு, உணவு பொருட்கள் பற்றாக்குறை ஆகியவை சர்வதேச அளவில் எதிரொலித்தது. இதனால், வளர்ந்த நாடுகளும் இந்த பாதிப்புகளை சந்திக்க தொடங்கின. எரிபொருள் வினியோகம் தடைப்பட்டது.

இதனால், போரை நிறுத்த முதலில் உலக நாடுகள் ஒன்றாக குரல் கொடுத்தன. அதன்பின்பு, உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் போர் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து, செயல்பட்டு வருகின்றன. ரஷியாவுக்கு எதிரான தடைகளை விதித்து வருகின்றன. உக்ரைனுக்கு வேண்டிய நிதி, ஆயுத உதவிகளையும் செய்து வருகின்றன.


ஆனால், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி பேச்சுவார்த்தை உள்ளிட்ட பிற முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்துள்ளன. இந்த போரானது, ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. போரின் விளைவால் இரு தரப்பிலும் பலர் உயிரிழந்து வருகின்றனர். கட்டிடங்கள் சேதமடைந்தும், வீரர்கள் போர் கைதிகளாக்கப்படுவதும் தொடர்ந்து வருகின்றன. சில பகுதிகளை ரஷியா கைப்பற்றுவதும், உக்ரைன் வீரர்கள் அதனை மீட்டெடுப்பதுவும் கூட தொடருகிறது.

எனினும், இந்த போரில் ரஷியாவுக்கு ஆதரவாக செயல்பட கூடாது என அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ஒன்றாக இணைந்து, உலக பொருளாதாரத்தில் 2-வது இடம் வகிக்கும் சீனாவிடம் கூறி வருகின்றன. போருக்கான ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை வழங்க கூடாது என எச்சரிக்கையும் விடுத்து வருகின்றன.

இந்த சூழலில், சீனாவுடன் நட்பு காட்டிய பிரான்சு அதிபர் மேக்ரான் சமீபத்தில் அந்நாட்டுக்கு சென்று அதிபர் ஜீ ஜின்பிங்கை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, ஓராண்டுக்கு மேல் போர் நீடித்து வரும் சூழலில், ஜெலன்ஸ்கி மற்றும் புதின் இருவரையும் பேச்சுவார்த்தைக்கு கொண்டு வரும்படி கேட்டு கொண்டார்.

இந்த பேச்சுவார்த்தையின்போது, சீனா எப்போதும் அமைதியின் பக்கமே நிற்கிறது என ஜின்பிங் கூறியுள்ளார். அமைதி ஏற்பட பங்காற்ற, பிற உலக நாடுகளுடன் ஒன்றிணைந்து பணியாற்ற விரும்புகிறோம் என்றும் தெரிவித்து உள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பரில், ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் பீஜிங் நகருக்கு 11 மணிநேரம் என்ற குறுகிய நேர பயணம் மேற்கொண்டார். அவருடைய இந்த பயணத்தின்போதும், ஜின்பிங்குடன் ரஷியா மற்றும் உக்ரைன் போர் பற்றி பேச்சுவார்த்தை நடந்தது. அப்போதும், ஜெர்மனி அதிபரிடம் இதே விசயங்களை ஜின்பிங் பகிர்ந்து கொண்டார்.

கடந்த மார்ச்சில் மாஸ்கோ நகருக்கு சீன அதிபர் பயணம் மேற்கொண்டபோதும், பொறுப்பான முறையிலான பேச்சுவார்த்தையே உக்ரைன் நெருக்கடிக்கான ஒரு நீடித்த தீர்வு ஏற்படுவதற்கான, சிறந்த வழியாக இருக்கும் என கூறியிருந்தது. ரஷியாவும் அதனை ஆமோதித்து இருந்தது.

எனினும், இரு நாடுகளும் ஒருபுறம் கூட்டறிக்கை வெளியிட்டபோதும், ஆளில்லா விமானங்கள், ராக்கெட் கொண்டு மறுபுறம் உக்ரைன் மீது ரஷியா கடுமையான தாக்குதலை தொடுத்து வருகிறது என ஜியோ பொலிடிக் தெரிவித்து உள்ளது. இரு நாடுகளும் வாய் வார்த்தைகளை கூறி விட்டு, போரில் தீவிரம் காட்டவே முனைப்புடன் உள்ளன என்பது தெளிவாக தெரியவந்தது.

ஆனால், இந்த போரானது தொடர்ந்து நிறுத்தப்படாமல் நீடிக்க வேண்டும் என்பதே சீனாவின் விருப்பம் என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். அதிலும் சீனா, போரை முடிவுக்கு கொண்டு வர செய்வதற்கான நடவடிக்கைக்கு ரஷியாவை கொண்டு வருவதில் அவர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

உக்ரைன் போரானது சீனாவுக்கு கிடைத்த ஆசீர்வாதம் போன்று காணப்படுகிறது. இந்த போரால் அமெரிக்க பொருளாதாரம் பின்னடைவை சந்திக்கும். போர் தொடரும்போது, மேற்கத்திய நாடுகளுக்கான எரிசக்தி வினியோகங்களை ரஷியா நிறுத்தியதும், அந்நாடுகளுக்கு முக்கியம் வாய்ந்த பொருளாதார சவாலாக இருக்கும். ரஷியாவும் பொருளாதார சரிவை காணும்.

இதனால், தைவானை தன்னுடன் இணைக்கும் திட்டத்திற்கு எதிராக அமெரிக்காவோ அல்லது அதன் கூட்டணி நாடுகளோ முழு அளவில் போரில் இறங்க முடியாமல் தடுக்கும் வகையில் இருக்கும் என சீனா உணருகிறது என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதுதவிர, போரில் ரஷியா வெற்றி பெற்று விட்டால், அது சீனாவுக்கு எதிரான விளைவையே ஏற்படுத்தும். ஏனெனில், மத்திய ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் ரஷியாவின் செல்வாக்கு உயரும். இதன்பின் இந்த பகுதிகளில் சீனாவுக்கான இடமின்றி அது வெளியே தள்ளப்படும் நிலை ஏற்படும் என ஜியோ பொலிடிக் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.


Next Story