காசா: பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பை சேர்ந்த 29 பணியாளர்கள் பலி


காசா:  பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பை சேர்ந்த 29 பணியாளர்கள் பலி
x

இஸ்ரேலுக்கு எதிராக நடந்த தாக்குதலில் இருந்து இதுவரை, காசாவில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பை சேர்ந்த 29 பணியாளர்கள் உயிரிழந்து உள்ளனர்.

டெல் அவிவ்,

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா.வின் நிவாரண மற்றும் பணிகளுக்கான அமைப்பு தன்னுடைய எக்ஸ் சமூக ஊடக பதிவில் வெளியிட்ட செய்தியில், காசாவில் இருந்த எங்களுடைய பணியாளர்கள் 29 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அவர்களில் 50 சதவீதத்தினர் ஆசிரியர்கள் ஆவர். இதனால் நாங்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறோம். எங்கள் வேதனைகளை ஒருவருக்கொருவர் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்கிறோம் என தெரிவித்து உள்ளது. ஐ.நா.வின் இந்த அமைப்பு, பாலஸ்தீன அகதிகளுக்கான நிவாரணம் மற்றும் மனித வளர்ச்சிக்கு உறுதுணையாக செயல்பட்டு வருகிறது.

இந்த அறிக்கையை தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் வேதனை தெரிவித்ததுடன், உடனடியாக போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

இஸ்ரேலுக்கு எதிராக கடந்த 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 2 லட்சம் இஸ்ரேல் நாட்டினர் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர்.

இதுபற்றி இஸ்ரேலின் நலன்களுக்கான அமைச்சகம் வெளியிட்ட தகவலில், 13 குடும்பங்களை சேர்ந்த 21 குழந்தைகள் பெற்றோர் இன்றி கைவிடப்பட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

இவர்களில் 16 பேரின் பெற்றோர்களில் இருவரும் கொல்லப்பட்டு உள்ளனர். மற்ற குழந்தைகளின் பெற்றோரில் ஒருவர் கொல்லப்பட்டும் மற்றொருவர் பணய கைதியாக சிறை பிடிக்கப்பட்டோ அல்லது காணாமலோ போயுள்ளனர். 4 வயது சிறுமி உள்பட பலர் பணய கைதியாக பிடித்து செல்லப்பட்டு உள்ளனர்.


Next Story