நடப்பு நிதிஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக குறையும் - சர்வதேச நிதியம்


நடப்பு நிதிஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக குறையும் - சர்வதேச நிதியம்
x

நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக குறையும் என்று முந்தைய கணிப்பை விட குறைவாக சர்வதேச நிதியம் கணித்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி

அமெரிக்காவில், சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டம் நடக்கிறது. இதையொட்டி, உலக பொருளாதார பார்வை குறித்த தனது வருடாந்திர அறிக்கையை சர்வதேச நிதியம் நேற்று வெளியிட்டது.

கடந்த நிதிஆண்டில் (2021-2022) இந்திய பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதமாக இருந்தது.

ஆனால், நடப்பு நிதிஆண்டில் (2022-2023), இந்திய பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக குறையும் என்று சர்வதேச நிதியம் கணித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் வெளியிட்ட கணிப்பில், இந்திய பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என்று கூறியிருந்தது. தற்போது, அதைவிட 0.6 சதவீதம் குறைவாக கணித்துள்ளது.

உலக பொருளாதாரம்

மேலும், கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட அறிக்கையில், 8.2 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எனவே, நடப்பு நிதிஆண்டின் 2-வது பாதி, எதிர்பார்த்ததை விட பலவீனமாக இருக்கும் என்று தெரிகிறது.

இந்திய பொருளாதாரம் மட்டுமின்றி உலக பொருளாதாரமும் சரிவை சந்திக்கும் என்று சர்வதேச நிதியம் கணித்துள்ளது. அதன்படி, உலக பொருளாதார வளர்ச்சி 6 சதவீதத்தில் இருந்து 3.2 சதவீதமாக குறையும் என்று கூறியுள்ளது. கடந்த 2001-ம் ஆண்டுக்கு பிறகு, இதுதான் மிகவும் குறைவான வளர்ச்சி ஆகும்.

அமெரிக்கா, சீனா

பொருளாதாரத்தில் முதல் 3 இடங்களில் உள்ள அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு, சீனா ஆகியவற்றின் பொருளாதாரமும் வீழ்ச்சியை சந்திக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உலகில் மூன்றில் ஒருபங்கு நாடுகள் பொருளாதார சரிவை சந்திக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க பொருளாதார வளர்ச்சி 1.6 சதவீதமாக குறையும் என்று தெரிகிறது.

சீனாவின் பொருளாதார வளர்ச்சி 8.1 சதவீதத்தில் இருந்து 3.2 சதவீதமாக குறையும் என்று சர்வதேச நிதியம் கணித்துள்ளது. சீனாவில் கொரோனா முற்றிலும் ஒழிய வேண்டும் என்பதற்காக அடிக்கடி பொதுமுடக்கம் செய்யப்பட்டது, ரியல் எஸ்டேட் வர்த்தகம் பலவீனம் அடைந்தது ஆகியவைதான் இதற்கு காரணங்கள் என்று கூறப்படுகிறது.

காரணம் என்ன?

''உக்ரைன் போர், பணவீக்க உயர்வால் வாழ்க்கை செலவு அதிகரித்தல், சீனாவில் நிலவும் மந்தநிலை, வளர்ந்த நாடுகள் கடனுக்கான வட்டியை அதிகரித்தது ஆகியவை பெரும் சவால்களாக உருவெடுத்து, உலக பொருளாதார மந்தநிலைக்கு காரணமாக அமைந்துள்ளன'' என்று சர்வதேச நிதியத்தின் பொருளாதார ஆலோசகர் பியரி ஆலிவியர் கொரிஞ்சாஸ், அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


Next Story