பாகிஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம்: இம்ரான்கானின் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு


பாகிஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம்: இம்ரான்கானின் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு
x

கோப்புப்படம்

தோஷகானா வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் மனைவி புஷ்ரா பீபியின் சிறை தண்டனையை கோர்ட்டு நிறுத்தி வைத்துள்ளது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 71) மீது பணமோசடி, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இதில் அவர் பிரதமராக இருந்தபோது பெற்ற பரிசுப்பொருட்களை விற்று ஊழல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

தோஷகானா ஊழல் எனப்படும் இந்த வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி (59) ஆகியோருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி கடந்த ஜனவரி 31-ந்தேதி முதல் அவர்கள் இருவரும் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இதற்கிடையே இந்த தண்டனையை எதிர்த்து இம்ரான்கான் தரப்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி அமீர் பரூக் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோரின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

எனினும் அவர்கள் விடுதலை செய்யப்படுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அதாவது அவர்கள் இருவருமே மற்றொரு ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இதனால் மற்ற வழக்குகளிலும் விடுதலை செய்யப்படும்வரை அவர்கள் தொடர்ந்து சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். எனவே இது அவர்களுக்கு ஒரு தற்காலிகமான நிவாரணம் என அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


Next Story