ஈரான் அரசு ரஷியாவுக்கு போரில் உதவுவதாக குற்றச்சாட்டு - உக்ரைனில் வாழும் ஈரானியர்கள் போராட்டம்


ஈரான் அரசு ரஷியாவுக்கு போரில் உதவுவதாக குற்றச்சாட்டு - உக்ரைனில் வாழும் ஈரானியர்கள் போராட்டம்
x

கீவ் நகரில் வசிக்கும் ஈரானியர்கள், ஈரான் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கீவ்,

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி ரஷியா தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் இருதரப்பிலும் மிகப்பெரிய அளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த போரில் உக்ரைன் ராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றன. அதே சமயம் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைனின் மின் நிலையங்கள் மீது ரஷிய படைகள் குறி வைத்து தாக்குதல் நடத்தியதால், அங்கு மிகப்பெரிய அளவில் மின்வெட்டு ஏற்படுள்ளது.

இதனிடையே உக்ரைன் மீது ரஷிய ராணுவம் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த ட்ரோன்களை ஈரானிடம் இருந்து ரஷியா வாங்கியதாக கூறப்படுகிறது. கடந்த 17-ந்தேதி கீவ் நகரின் மீது ரஷியா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தொடர்ச்சியாக பல இடங்களில் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும் இது குறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் கிர்பி கூறுகையில், ஈரான் ராணுவம் கிரிமியா பகுதியில் நேரடியாகவே களமிறங்கி ரஷிய ராணுவத்திற்கு உதவி வருவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் உக்ரைனின் தலைநகரான கீவ் நகரில் வசிக்கும் ஈரானியர்கள், ஈரான் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். ஈரான் அரசு ரஷிய அதிபர் புதினை விட மோசமானது என குற்றம்சாட்டிய அவர்கள், ஈரான் அரசுக்கு எதிரக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ரஷியாவிற்கு உதவுவதை ஈரான் கைவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

1 More update

Next Story