டுவிட்டரின் தலைமை பொறுப்பில் இருந்து எலான் மஸ்க் விலக வேண்டும்..!! - பயனாளர்கள் அறிவுறுத்தல்

டுவிட்டரின் தலைமை பொறுப்பில் இருந்து எலான் மஸ்க் விலக வேண்டும் என்று கருத்து கணிப்பில் பயனாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சான்பிரான்சிஸ்கோ,

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை ரூ.3.6 லட்சம் கோடிக்கு வாங்க கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் போட்டார். பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு, இறுதியாக கடந்த அக்டோபர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை அவர் கையகப்படுத்தினார்.

அப்போது முதல் அவர் டுவிட்டர் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். இதனால் அவர் சர்வதேச அளவில் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார். சமீபத்தில் தன்னை பற்றி பத்திரிகைகளில் எழுதி வந்த பத்திரிகையாளர்களின் டுவிட்டர் கணக்குகளை முடக்கிய எலான் மஸ்க் கடும் எதிர்ப்புக்கு பின் அவற்றை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

இந்த சூழலில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிற சமூக ஊடக தளங்களை விளம்பரப்படுத்துவதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்ட கணக்குகளை முடக்கப்போவதாக டுவிட்டர் நேற்று முன்தினம் அறிவித்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து நான் விலக வேண்டுமா? என எலான் மஸ்க் டுவிட்டரில் கருத்து கணிப்பு ஒன்றை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நீங்கள் அளிக்கும் வாக்கை கவனமாக அளியுங்கள். ஏனெனில் உங்கள் விருப்பம் தான் நிச்சயமாக நிறைவேறும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதில் 1.70 கோடிக்கு அதிகமான பயனாளர்கள் வாக்களித்தனர். இதில் 57.5 சதவீதம் பேர் டுவிட்டர் தலைமை பொறுப்பில் இருந்து எலான் மஸ்க் விலக வேண்டும் என வாக்களித்து உள்ளனர். இந்த கருத்துக்கணிப்பு முடிவு குறித்து எலான் மஸ்க் தரப்பில் எந்த பதிலும் இதுவரை வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com