மியான்மர்: ஆங் சான் சூகியின் சிறைத் தண்டனை 26 ஆண்டுகளாக நீட்டிப்பு


மியான்மர்: ஆங் சான் சூகியின் சிறைத் தண்டனை 26 ஆண்டுகளாக நீட்டிப்பு
x

Image Courtesy: AFP 

ஊழல் வழக்கில் ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மியான்மரின் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி (77 வயது). இவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். இவர் தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது.

ஆனால் இந்த தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி ஆங் சாங் சூகியின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு ராணுவம் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியது. அதை தொடர்ந்து ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

அவர் மீது ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டியது, கொரோனா விதிகளை மீறியது, அலுவலக ரீதியான சட்டங்களை மீறியது, ஊழல் முறைகேடுகள் என வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பான விசாரணை மியான்மர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் கடந்த டிசம்பரில் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம், பிறகு பல்வேறு வழக்குகளில் 17 ஆண்டுகள் வரை தண்டனையை நீட்டித்தது.

தொடர்ந்து, தேர்தல் முறைகேடு வழக்கில் ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சூகிக்கு இதுவரை 11 வழக்குகளில் 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீது மேலும் பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில், இன்னொரு ஊழல் வழக்கில் ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை மியான்மர் ராணுவ நீதிமன்றம் விதித்துள்ளது. இதன் மூலம் தற்போது அவரது சிறைத் தண்டனை காலம் 26 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story