நியூசிலாந்து: இந்திரா காந்தி படுகொலை வழக்கில் தொடர்புடைய மெய்க்காப்பாளரின் மருமகன் போதை பொருள் கடத்தலில் கைது

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை வழக்கில் தொடர்புடைய மெய்க்காப்பாளரின் மருமகன் நியூசிலாந்து நாட்டில் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
ஆக்லாந்து,
நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் மனுகாவ் பகுதியில் போதை பொருள் பயன்பாடு பற்றி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. இதனை தொடர்ந்து நகர காவல் துறை அதிகாரிகள், குறிப்பிட்ட அந்த இடத்திற்கு சென்று அதிரடி சோதனையிட்டு உள்ளனர்.
இதில், மெத்தம்பிடமைன் என்ற போதை பொருளை பீர் கேன்களில் அதிக அளவில் மறைத்து வைத்து இருப்பது தெரிய வந்தது. இதில் தொடர்புடைய பல்தேஜ் சிங் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், முன்னாள் பிரதமரான இந்திரா காந்திக்கு பாதுகாவலராக இருந்த சத்வந்த் சிங் என்பவரின் மருமகன் இந்த பல்தேஜ் சிங் என்பது தெரிய வந்துள்ளது. சத்வந்த் சிங் மற்றும் மற்றொரு பாதுகாவலரான பியாந்த் சிங் ஆகிய இருவரும் இந்திரா காந்தியின் மெய்க்காப்பாளராக இருந்து வந்தனர்.
விசுவாசத்திற்கு பெயர் போன சீக்கியர்களான அவர்கள், பாதுகாப்பு பணியில் இருந்தபோதே நாட்டின் பிரதமராக இருந்த, இந்திரா காந்தியை உடல் முழுவதும் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.