பாகிஸ்தான்: பஞ்சாப் மாகாண முதல் பெண் முதல்-மந்திரியாகிறார் மரியம் நவாஸ்


பாகிஸ்தான்:  பஞ்சாப் மாகாண முதல் பெண் முதல்-மந்திரியாகிறார் மரியம் நவாஸ்
x

பஞ்சாப் மாகாணத்தில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியானது, 137 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

லாகூர்,

பாகிஸ்தான் நாட்டில் கடந்த 8-ந்தேதி பொது தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. உடனடியாக வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி நடந்தது. எனினும், தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. இந்த தேர்தலில், பஞ்சாப் மாகாண சட்டசபைக்கான வாக்கு பதிவும் நடந்தது.

12 கோடி பேர் மக்கள் தொகை கொண்ட பஞ்சாப் மாகாணத்தில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியானது, 137 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவு பெற்ற சுயேச்சைகள் 113 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

இதுதவிர, இம்ரான் கானின் ஆதரவு பெறாத வேறு 20 சுயேச்சைகள் முன்பே, பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியில் இணைந்து விட்டனர்.

இந்நிலையில், பாகிஸ்தானில் மொத்தமுள்ள 5 சட்டசபைகளில் பஞ்சாப் மாகாண சட்டசபையானது முதலில் கூட்டத்தொடரை தொடங்க உள்ளது. பஞ்சாப் சட்டசபையை நாளை (வெள்ளி கிழமை) கூட்டும்படி கவர்னர் பலிகுர் ரகுமான் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.

இதில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவி பிரமாணம் செய்து கொள்வதுடன், புதிய அரசு உருவாக்கமும் தொடங்கும் என்று கவர்னர் இல்ல செய்தி தொடர்பாளர் ஒருவர் இன்று கூறியுள்ளார். இதன்படி, 3 முறை பிரதமராக பதவி வகித்த நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் (வயது 50), பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதல்-மந்திரியாகிறார்

பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் துணை தலைவராகவும் மரியம் பதவி வகிக்கிறார். நவாஸ் ஷெரீப்பின் அரசியல் வாரிசாகவும் அவர் அறியப்படுகிறார். மரியம் நவாசுக்கு, முன்பே முதல்-மந்திரிக்கு வழங்க கூடிய பாதுகாப்பு வழங்கப்பட்டு விட்டது. மாகாணத்தின் முக்கிய அதிகாரிகளுடன் அவர் கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.


Next Story