பாகிஸ்தானில் ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறார்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!


பாகிஸ்தானில் ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறார்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
x

பாகிஸ்தானில் தினமும் 12 பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாவதாக, அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த 'சமா டிவி'-இன் புலனாய்வுப் பிரிவால் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.பஞ்சாப் மாகாணத்தின் உள்துறை மற்றும் மனித உரிமைகள் அமைச்சகத்திடம் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வின் முடிவுகள் படி, பாகிஸ்தானில் பெண்களின் கற்பழிப்பு வழக்குகள் அதிகரித்துள்ளன, ஆனால் அந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் தண்டனை விகிதம் வெறும் 0.2 சதவீதமாக மட்டுமே இருக்கிறது.

பாகிஸ்தானில் 2017 முதல் 2021 வரை 21,900 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது, நாடு முழுவதும் தினமும் 12 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள் அல்லது ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகிறார்.

2017 ஆம் ஆண்டில், 3,327 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 2018 இல் 4,456 வழக்குகளாகவும், 2019 இல் 4,573 வழக்குகளாகவும், 2020 இல் 4,478 வழக்குகளாகவும் குறைந்து 2021 இல் 5,169 வழக்குகளாகவும் உயர்ந்துள்ளது.

நடப்பு ஆண்டில், நாடு முழுவதும் 305 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. மே மாதம் 57 வழக்குகள், ஜூன் (91), ஜூலை (86) மற்றும் ஆகஸ்ட் (71) வழக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில், போலீசார் 2,856 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். ஆனால் அவற்றுள் 4 சதவீத வழக்குகள் மட்டுமே கோர்ட்டில் விசாரணைக்கு வந்தன.

2020இல் ஐ.நா அறிக்கையின்படி, நீதிமன்றங்களில் பெண்களுக்கு எதிரான பாரபட்சமான நடவடிக்கை நடைமுறையில் உள்ள 75 நாடுகளில் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது.

ஆனால் பதிவாகியிருக்கும் பாலியல் புகார்கள் உண்மை நிலவரத்தை பிரதிபலிக்கவில்லை. புகார் அளித்த தங்கள் மீது பழிவாங்கும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறும் என்கிற பயம் பலருக்கும் உள்ளதால்

குற்றச்சம்பவங்களை அதிகாரிகளிடம் புகார் செய்வதிலிருந்து பெண்கள் தடுக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டில் அதிகரித்து வரும் கவுரவக் கொலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுசர்வதேச அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

மேலும், பாலினப் பாகுபாட்டின் அடிப்படையில் பாகிஸ்தான் இரண்டாவது மோசமான நாடு என்று உலகப் பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. பாலினப் பாகுபாடு நீடிக்கும் 146 நாடுகள் பட்டியலில் 145வது இடத்துக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது.


Next Story