கிறிஸ்துமஸ் உரையில் உக்ரைன் போரை மறைமுகமாக கண்டித்த போப்


கிறிஸ்துமஸ் உரையில் உக்ரைன் போரை மறைமுகமாக கண்டித்த போப்
x

கோப்புப்படம்

கிறிஸ்துமஸ் உரையில் உக்ரைன் போரை போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைமுகமாக கண்டித்தார்.

வாடிகன் சிட்டி,

உலகம் முழுவதும் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டப்பட்டது. இதையொட்டி ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமான வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலயத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.

முழங்கால் வலி காரணமாக போப் ஆண்டவர் சக்கர நாற்காலியில் தேவாலயத்துக்கு வந்தார். அங்கு அவர் குழந்தை இயேசுவின் சொரூபத்தை கையில் வாங்கி முத்தமிட்டார். பின்னர் அவர் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனையை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து பேராலயத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அவர் கிறிஸ்துமஸ் உரை நிகழ்த்தினார். அப்போது அவர், உக்ரைன் மற்றும் ரஷியாவின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் இருநாடுகளுக்கு இடையிலான போரை மறைமுகமாக கண்டித்தார்.

அவர் பேசுகையில், "மக்கள் போராலும், வறுமையாலும் அவதிப்படுகின்றனர். போர், வறுமை மற்றும் அநீதியால் விழுங்கப்படும் குழந்தைகளை நினைத்து எல்லாவற்றிற்கும் மேலாக கவலை கொள்கிறேன். நம் உலகில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் செல்வம் மற்றும் அதிகாரத்திற்கான பசியில் தங்கள் அண்டை வீட்டாரையும், தங்கள் சகோதர சகோதரிகளையும் கூட உண்கிறார்கள். எத்தனை போர்களைப் பார்த்தோம். இன்றும் எத்தனை இடங்களில் மனித மாண்பும், சுதந்திரமும் இழிவாக நடத்தப்படுகின்றன" என கூறினார்.


Next Story