இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி 50-வது நாளாக போராட்டம்

ராஜபக்சே குடும்பத்தினர் அரசியலில் இருந்து விலகினால் மட்டுமே எங்களின் போராட்டம் முடிவுக்கு வரும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி 50-வது நாளாக போராட்டம்
Published on

கொழும்பு,

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி தொடர்கிறது. அத்தியாவசிய பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எரிபொருட்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால், அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி, அதில் வன்முறை அரங்கேறிய நிலையில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினார்.

புதிய பிரதமராக ரணில் விக்ரம சிங்கே பதவி ஏற்றுள்ளார்.நிதித்துறை பொறுப்பையும் அவரே ஏற்றுள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்காக பல்வேறு திட்டங்களை ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு செய்து வருகிறது.

புதிய அரசு அமைந்தாலும், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இலங்கை அதிபர் அலுவலகத்தின் நுழைவு வாயிலை ஆக்கிரமித்து கடந்த 49 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இன்று போராட்டம் 50-வது நாளை எட்டியுள்ளது. போராட்டம் 50-வது நாள் எட்டியதை குறிக்கும் வகையில் பேரணி நடைபெற்றது. போராட்டத்தில் இன்று கூடுதல் நபர்களும் கலந்து கொண்டனர். ராஜபக்சே குடும்பத்தினர் அரசியலில் இருந்து விலகினால் மட்டுமே எங்களின் போராட்டம் முடிவுக்கு வரும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com