உக்ரைன் தலைநகரில் ரஷியா ஏவுகணை மழை..!!


உக்ரைன் தலைநகரில் ரஷியா ஏவுகணை மழை..!!
x

கோப்புப்படம்

உக்ரைன் தலைநகர் கீவில் ரஷிய படைகள் ஏவுகணை மழை பொழிந்ததில் கட்டிடங்கள் தரைமட்டமாகின.

கீவ்,

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைந்து பாதுகாப்பு தேட முயன்ற உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷியா போர் தொடுத்தது.

உக்ரைனின் ராணுவ நிலைகள் மட்டுமே இலக்கு என கூறி போரை தொடங்கிய ரஷியா பின்னர் குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள், ஆஸ்பத்திரிகள், மின்நிலையங்கள் என தாக்குதல்களை விரிவுப்படுத்தியது. அந்த வகையில் தற்போது ரஷிய படைகள் உக்ரைனின் பொதுஉள்கட்டமைப்புகளை மட்டுமே குறிவைத்து சரமாரியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

கீவ் நகர் மீது மீண்டும் கவனம்

போர் தொடங்கிய சமயத்தில் தலைநகர் கீவை கைப்பற்ற ரஷிய படைகள் தீவிரமாக முயன்றன. ஆனால் உக்ரைன் ராணுவத்தின் கடுமையான எதிர்ப்பால் ரஷிய படைகள் அங்கிருந்து பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்பிறகு உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் உள்ள நகரங்கள் மீது கவனத்தை திருப்பிய ரஷிய படைகள் கடுமையான தாக்குதல்கள் மூலம் பல நகரங்களை ஆக்கிரமித்தன.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரஷிய படைகள் மீண்டும் கீவ் நகர் மீது கவனத்தை குவித்தன. அங்கு ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை பயன்படுத்தி சரமாரியாக தாக்குதல்களை நடத்தின. எனினும் புத்தாண்டு (ஜனவரி 1-ந் தேதி) முதல் கீவ் நகரில் தாக்குதல்கள் நடத்தப்படவில்லை.

ஏவுகணை மழை

இந்த நிலையில் நேற்று அதிகாலை கீவ் நகர் மீது ரஷிய படைகள் அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி தாக்கின. ரஷியாவின் ஏவுகணை மழையில் கீவ் நகரம் அதிர்ந்தது. இதில் 18 வீடுகள் உள்பட ஏராளமான கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன. ஏவுகணை தாக்குதலில் பல கட்டிடங்கள் தீப்பற்றி எரிந்தன. எனினும் இந்த தாக்குதலில் உயிரிழப்பு அல்லது காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.

முன்னதாக உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள டொனட்ஸ்க் மாகாணத்தில் உள்ள சோலிடர் நகரை கைப்பற்றி விட்டதாக ரஷியா நேற்று முன்தினம் அறிவித்தது. ஆனால் அதை மறுத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, சோலிடர் நகரில் சண்டை தொடர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.


Next Story