சிங்கப்பூரில் கோத்தபய ராஜபக்சே மேலும் 14 நாட்கள் தங்க அனுமதி


சிங்கப்பூரில் கோத்தபய ராஜபக்சே மேலும் 14 நாட்கள் தங்க அனுமதி
x

கோப்புப்படம்

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே மேலும் 14 நாட்கள் தங்கள் நாட்டில் தங்கிக்கொள்ள சிங்கப்பூர் அனுமதி வழங்கியது.

சிங்கப்பூர்,

இலங்கையின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, அந்த நாட்டை ஆண்ட அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்துக்கு எதிரான மக்கள் கிளர்ச்சியாக மாறியது. அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து சூறையாடும் அளவுக்கு நிலைமை விபரீதமாக மாறியபோது, கோத்தபய ராஜபக்சே கடந்த 13-ந் தேதி மாலத்தீவுக்கு ஓட்டம் பிடித்தார். அங்கேயும் அவருக்கு எதிராக மக்கள் போர்க்கொடி தூக்கினர்.

இதையடுத்து மறுநாளில் (14-ந் தேதி) அவர் சிங்கப்பூருக்கு சென்றார். அங்கு சென்றதும் அவர் அதிபர் பதவியை விட்டு விலகினார்.

சிங்கப்பூரில் யாருக்கும் அரசியல் தஞ்சம் அளிப்பதில்லை. இதனால் அவருக்கு 14 நாட்கள் தங்கிக்கொள்ள மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. முதலில் அங்கு சிட்டி சென்டரில் உள்ள ஒரு ஓட்டலில் அவர் தங்கினார். பின்னர் ஒரு தனியார் இல்லத்துக்கு அவர் சென்று விட்டார். வெளியே யாரும் அவரைப் பார்த்ததாக தகவல் இல்லை.

நேற்று முன்தினம் கொழும்பு நகரில் மந்திரிசபை கூட்டத்துக்கு பின்னர் மந்திரிசபை செய்தி தொடர்பாளர் குணவர்த்தனா நிருபர்களிடம் பேசுகையில், "கோத்தபய ராஜபக்சே ஒளிந்து கொண்டிருக்கவில்லை. அவர் சிங்கப்பூரில் இருந்து திரும்பி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது" என பதில் அளித்தார். ஆனாலும் கோத்தபய ராஜபக்சே குறித்து கூடுதல் தகவல்கள் எதையும் வெளியிடவில்லை.

இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே மேலும் 14 நாட்கள் (ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி வரை) சிங்கப்பூரில் தங்கிக்கொள்வதற்கு அந்த நாட்டின் அரசு அனுமதி வழங்கி உள்ளது. புதிய விசாவும் வழங்கி இருக்கிறது.

உள்ளூர் ஊடகம் ஒன்று இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.


Next Story