செங்கடலில் அமெரிக்க ஹெலிகாப்டர்கள் அதிரடி தாக்குதல் - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 10 பேர் பலி


செங்கடலில் அமெரிக்க ஹெலிகாப்டர்கள் அதிரடி தாக்குதல் - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 10 பேர் பலி
x

செங்கடலில் பயணிக்கும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

சனா,

காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் காசாவில் இதுவரை 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, ஐரோப்பாவையும், ஆசியாவையும் கடல் வழியே இணைக்கும் சூயஸ் கால்வாயின் தொடக்க புள்ளியாக செங்கடல் உள்ளது. செங்கடல் வழியாக இஸ்ரேலுக்கும் உலகின் பல நாடுகளுக்கும் சரக்கு கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. உலக வர்த்தகத்தில் 12 சதவிகிதம் சூயஸ் கால்வாய் வழியாக மேற்கொள்ளப்படுகிறது.

அதேவேளை, ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஆதரவாக செங்கடல் வழியாக செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், சரக்கு கப்பல்களையும் கடத்தும் முயற்சியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாக்குதலால் செங்கடல் வழியிலான பயணத்தை பல்வேறு சரக்கு கப்பல் நிறுவனங்கள் தவிர்த்து வருகின்றன. இதையடுத்து, செங்கடலில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த போர் கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், சிங்கப்பூருக்கு செங்கடல் வழியாக சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பலை குறிவைத்து நேற்று அதிகாலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து உதவிகேட்டு சரக்கு கப்பல் கேப்டன் அமெரிக்க கடற்படைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

உடனடியாக போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களுடன் அமெரிக்க போர் கப்பல் விரைந்துள்ளது. அமெரிக்க விமானப்படை ஹெலிகாப்டர்கள் விரைந்து வந்து, சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்கின.

அமெரிக்க ஹெலிகாப்டர்கள் நடத்திய தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பயணித்த 3 படகுகள் செங்கடலில் மூழ்கடிக்கப்பட்டன. அதேவேளை, ஹெலிகாப்டர் தாக்குதலில் இருந்து தப்பிய ஒரு படகில் சில ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தப்பிச்சென்றனர். இந்த சம்பவத்தால் செங்கடலில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.


Next Story