ஹமாஸ் சுரங்கத்தில் இருந்து 5 பணய கைதிகளின் உடல்கள் மீட்பு - இஸ்ரேல் தகவல்


ஹமாஸ் சுரங்கத்தில் இருந்து 5 பணய கைதிகளின் உடல்கள் மீட்பு - இஸ்ரேல் தகவல்
x

இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த அக்டோபர் 7ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.

ஜெருசலேம்,

இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7ம் தேதி காசா முனையில் செயல்படும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் பயங்கரவாத தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது.

இஸ்ரேல் - ஹமாஸ் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக காசா முனையில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 20 ஆயிரத்து 424 பேர் உயிரிழந்துள்ளனர். காசா முனையில் தரைவழி தாக்குதலின்போது ஹமாஸ் ஆயுதக்குழுவுடன் நடந்த மோதலில் இதுவரை இஸ்ரேலிய பாதுகாப்புப்படையினர் 157 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, பாலஸ்தீனத்தின் மேற்குகரையிலும் வன்முறை வெடித்துள்ளது. மேற்குகரையில் இதுவரை 303 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, காசாமுனையில் உள்ள பணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. ஆனாலும், இன்னும் 129 பேர் காசாவில் பணய கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் காசா முனைக்கு கடத்தி செல்லப்பட்டவர்களில் 5 பேர் பிணமாக மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 7ம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின்போது ஹமாஸ் ஆயுதக்குழுவால் கடத்தப்பட்ட இஸ்ரேலியர்கள் இடன் சிஷெர்யா, சிவ் டடூ, எலியொ டுலிடனொ, நிக் பெய்சர், ரொன் ஷெர்மென் ஆகிய 5 பேரை இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் பிணமாக மீட்டுள்ளனர்.

காசாவில் ஹமாஸ் சுரங்கத்தில் இருந்து 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட 5 பேரின் உடல்களை பாதுகாப்புப்படையினர் இஸ்ரேலுக்கு கொண்டு சென்றனர்.

1 More update

Next Story