அனைத்து பணய கைதிகளும் விடுதலையாகும் வரை இந்த டாலரை அணிந்திருப்பேன் - இஸ்ரேலில் எலான் மஸ்க் நெகிழ்ச்சி


அனைத்து பணய கைதிகளும் விடுதலையாகும் வரை இந்த டாலரை அணிந்திருப்பேன் - இஸ்ரேலில் எலான் மஸ்க் நெகிழ்ச்சி
x

டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் இஸ்ரேல் சென்றுள்ளார்.

ஜெருசலேம்,

இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7ம் தேதி காசா முனையில் செயல்படும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் பயங்கரவாத தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும், இஸ்ரேலில் இருந்து 200க்கும் மேற்பட்டோரை பயண கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது.

போரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரின்போது மேற்குகரை பகுதியிலும் வன்முறை வெடித்தது. இந்த மோதலில் மேற்குகரையில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா, எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் முயற்சித்தன. இந்த முயற்சியின் பலனாக கடந்த 24ம் தேதி முதல் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 4 நாட்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. மேலும், நிபந்தனை அடிப்படையில் தங்கள் வசம் உள்ள பணய கைதிகளில் சிலரை ஹமாஸ் விடுவித்தது. இதற்கு மாறாக தங்கள் நாட்டின் சிறையில் உள்ள பாலஸ்தீனியர்களில் சிலரை இஸ்ரேல் விடுவித்தது.

4 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் பேச்சுவார்த்தையின் பலனாக மேலும் 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) தற்காலிக போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 நாட்களிலும் மேலும் சில இஸ்ரேலிய பணய கைதிகளை ஹமாஸ் ஆயுதக்குழுவினரும், பாலஸ்தீனிய சிறைக்கைதிகளை இஸ்ரேல் அரசும் விடுதலை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், டுவிட்டர் (எக்ஸ்) நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் இஸ்ரேல் சென்றுள்ளார். அவர் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கை சந்தித்தார். அதேபோல், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்த எலான் மஸ்க் ஹமாஸ் ஆயுதக்குழுவால் பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளான பகுதிகளை நேரில் பார்வையிட்டார்.

இந்நிலையில், ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் பணய கைதிகளாக கடத்தி செல்லப்பட்ட இஸ்ரேலியர்களின் குடும்பத்தினரை சந்தித்து எலான் மஸ்க் ஆறுதல் கூறினார். அப்போது, பணய கைதிகளின் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் எலான் மஸ்க்கிற்கு எங்கள் மனம் காசாவில் உள்ள பணய கைதிகளை நினைத்துக்கொண்டுள்ளது என எழுதப்பட்டிருந்த 'டாலர்' ஒன்றை கொடுத்தார். அதை பெற்றுக்கொண்ட எலான் மஸ்க் தனது கழுத்தில் அணிந்துகொண்டார். பின்னர் கூறிய மஸ்க், காசாவில் இருந்து அனைத்து பணய கைதிகளும் விடுதலை செய்யப்படும் வரை நான் இந்த டாலரை அணிந்திருப்பேன்' என்றார்.


Next Story