நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: மழையால் பாதித்த முதல் நாள் ஆட்டம்...இங்கிலாந்து 315/3


நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: மழையால் பாதித்த முதல் நாள் ஆட்டம்...இங்கிலாந்து 315/3
x

Image Courtesy: AFP 

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து அணி அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது.

வெல்லிங்டன்,

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் 267 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.

இந்த போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றலாம் என நினைத்து களம் இறங்கியது இங்கிலாந்து. இந்த போட்டிக்கான டாஸில் ஜெயித்த நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஜேக் க்ராவ்லி மற்றும் பென் டக்கட் அகியோர் முறையே 2 ரன் மற்றும் 9 ரன்னில் வீழ்ந்தனர். இதையடுத்து களம் புகுந்த ஓலி போப்பும் 10 ரன்னில் அவுட் ஆனார். இதனால் அந்த அணி 21 ரன்னுக்கும் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து அனுபவ வீரர் ஜோ ரூட்டும், இளம் அதிரடி ஆட்டக்காரர் ஹாரி புரூக்கும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதில் அதிரடியாக ஆடிய ஹாரி புரூக் 107 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். மேற்கொண்டு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய புரூக் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார். இதனால் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

ஒரு முனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருந்த புரூக் இரட்டை சதத்தை நோக்கி நகர்ந்தார். இதற்கிடையில் பொறுமையாக ஆடிய ரூட் சதம் அடித்து அசத்தினார். ரூட் 101 ரன்னிலும், புரூக் 184 ரன்னிலும் இருந்த போது மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்த இணை இதுவரை 4வது விக்கெட்டுக்கு 294 ரன்கள் சேர்த்துள்ளது. தற்போது வரை இங்கிலாந்து அணி 65 ஓவர்களில் 315 ரன்கள் குவித்துள்ளது.

மழை நின்றதும் ஆட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழை நிற்காத காரணத்தால் முதல் நாள் ஆட்டன் அத்துடன் முடிவுக்கு வந்தது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டத்தில் 25 ஓவர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து தற்போது புரூக்கின் அதிரடி ஆட்டம் மற்றும் ரூட்டின் நிதான ஆட்டத்தால் நல்ல நிலையில் உள்ளது. 2ம் நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.


Next Story