பும்ரா அபார பந்துவீச்சு.... இங்கிலாந்துக்கு எதிராக 2-வது நாளில் வலுவான நிலையில் இந்தியா


பும்ரா அபார பந்துவீச்சு.... இங்கிலாந்துக்கு எதிராக 2-வது நாளில் வலுவான நிலையில் இந்தியா
x

image courtesy; twitter/@BCCI

தினத்தந்தி 3 Feb 2024 11:06 AM GMT (Updated: 3 Feb 2024 11:42 AM GMT)

இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 396 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

விசாகப்பட்டினம்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் குவித்திருந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக இளம் நட்சத்திர வீரர் 179 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.

இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் அஸ்வின் 20 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து குல்தீப் யாதவ் களம் இறங்கினார். மறுமுனையில் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தினார். அவர் 277 பந்துகளில் 201 ரன்கள் அடித்து அசத்தினார். இதில் 18 பவுண்டரி மற்றும் 7 சிக்சர்கள் அடங்கும். தொடர்ந்து ஆடிய ஜெய்ஸ்வால் 209 ரன்களில் அவுட் ஆனார்.

இதையடுத்து குல்தீப் யாதவுடன் ஜஸ்ப்ரீத் பும்ரா ஜோடி சேர்ந்தார். இறுதியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 112 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 396 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 209 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயப் பஷிர் மற்றும் ரெஹன் அகமது ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலி மற்றும் பென் டக்கெட் களமிறங்கினர். இவர்களில் டக்கெட் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய முந்தைய ஆட்டத்தின் நாயகன் ஒல்லி போப் இந்த முறை நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 23 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஒரு புறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜாக் கிராலி 78 பந்துகளில் 76 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய வீரர்களில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தவிர மற்றவர்களில் ஜோ ரூட் 5 ரன்களிலும், ஜானி பேர்ஸ்டோவ் 25 ரன்களிலும், பென் போக்ஸ் 6 ரன்களிலும் விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். நிலைத்து விளையாடிய ஸ்டோக்சும் 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.

முடிவில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 55.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 253 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் இந்திய அணி 143 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய பும்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜாக் கிராலி 76 ரன்கள் அடித்தார்.

இதனையடுத்து இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் அடித்திருந்தபோது 2-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஜெய்ஸ்வால் 15 ரன்களுடனும், ரோகித் சர்மா 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி இதுவரை 171 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.


Next Story