கடைசி டெஸ்ட்: ரிஸ்வான் , அமீர் ஜமால் அரைசதம்...! முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 313 ரன்களுக்கு ஆட்டமிழப்பு


கடைசி டெஸ்ட்:  ரிஸ்வான் , அமீர் ஜமால் அரைசதம்...! முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 313 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
x

ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய கேப்டன் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் முடிந்துள்ளன. அந்த இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது.இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது . இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.,

அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அப்துல்லா ஷபீக், சைம் அயூப் இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

பின்னர் களமிறங்கிய பாபர் அசாம் 26 ரன்களும் , ஷான் மசூத் 35 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த முகமது ரிஸ்வான் , ஆகா சல்மான் இருவரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

நிலைத்து ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். அரைசதம் கடந்த பிறகு சற்று அதிரடி காட்டிய ரிஸ்வான் 88 ரன்கள் எடுத்து கம்மின்ஸ் பந்துவீச்சில் வெளியேறினார். அவரைதொடர்ந்து ஆகா சல்மான் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஒருகட்டத்தில் 227 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழக்கும் நிலையில் பாகிஸ்தான் அணி இருந்தது. ஆனால் கடைசி விக்கெட்டுக்கு அமீர் ஜமால் , மிர் ஹம்சா ஆகியோர் இணைந்து பாகிஸ்தான் அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

குறிப்பாக அமீர் ஜமால் பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டார். அவருக்கு மிர் ஹம்சா தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு ஒத்துழைப்பு கொடுத்தார்.

அரைசதம் அடித்து சிறப்பாக விளையாடிய அமீர் ஜமால் 82 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 77.1 ஓவர்களில் 313 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய கேப்டன் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்துள்ளது. டேவிட் வார்னர் 6 ரன்களும் , உஸ்மான் கவாஜா ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.


Next Story