டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய நியூசிலாந்து - ரசிகர்கள் அதிர்ச்சி

குரூப் சி-யில் இருந்து ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
Image Courtesy: @T20WorldCup
Image Courtesy: @T20WorldCup
Published on

டிரினிடாட்,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் டிரினிடாடில் இன்று நடைபெற்ற 29வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - பப்புவா நியூ கினியா அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பப்புவா நியூ கினியா அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 95 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக கிப்ளின் டோரிகா 27 ரன்கள் அடித்தார்.

ஆப்கானிஸ்தான் தரப்பில் பசல்ஹக் பரூக்கி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 96 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 15.1 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 101 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் தரப்பில் குல்பைதீன் நைப் 49 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணி இடம் பெற்றுள்ள குரூப் சி-யில் இடம் பெற்றுள்ள நியூசிலாந்து அணி இதுவரை விளையாடிய 2 ஆட்டங்களில்  இரண்டிலும் தோல்வியை கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் ஆப்கானிஸ்தான் அணி எஞ்சிய இரு ஆட்டங்களிலும் தோல்வி காண வேண்டும் என்ற நிலை இருந்தது.

ஆனால் தற்போது ஆப்கானிஸ்தான் அணி தங்களது 3 லீக் ஆட்டத்தில் பப்புவா நியூ கினியா அணியை வீழ்த்தி (3 ஆட்டம், 3 வெற்றி - 6 புள்ளி) சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இதன் மூலம் நியூசிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியாது. இதன் காரணமாக அந்த அணி தொடரில் இருந்து வெளியேறியது. ஏற்கனவே இந்த பிரிவில்  வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருந்தது.

இதன் மூலம் குரூப் சி-யில் இருந்து ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளன. இந்த பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளான உகாண்டா, பப்புவா நியூ கினியா, நியூசிலாந்து அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. பலம் வாய்ந்த நியூசிலாந்து அணி தொடரில் இருந்து வெளியேறியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com