டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா...வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் வீரர்கள்

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பல முன்னாள் மற்றும் இந்நாள் பாகிஸ்தான் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா...வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் வீரர்கள்
Published on

கராச்சி,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று முடிந்த 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 17 ஆண்டுகள் கழித்து டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பரம எதிரியான பாகிஸ்தானை சேர்ந்த சில முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்களும் கூட இந்திய அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அந்த வரிசையில்,

சோயப் அக்தர் வாழ்த்து தெரிவித்துள்ளது பின்வருமாறு;- "ரோகித் சர்மா இதை செய்துள்ளார். உணர்ச்சிகள் உச்சகட்டமாக இருக்கிறது. இந்தியா இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள். அவர்களுக்கு வாழ்த்துகள். 2023 உலகக்கோப்பை பைனலில் அகமதாபாத் நகரில் அவர்கள் தோற்றனர். அந்தத் தொடரையும் இந்தியா வெல்வதற்கு தகுதியானவர்கள் என்று நான் சொல்லியிருந்தேன். தற்போது அதை சாதித்துள்ள ரோகித் சர்மா களத்தில் அழுவதே இந்த வெற்றி அவருக்கு எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லும்" என்று கூறினார்.

பாகிஸ்தான் முன்னாள் கேப்டனாக ஷாகித் அப்ரிடி கூறுகையில், "நினைவில் கொள்ளக்கூடிய இந்த வெற்றிக்காக இந்தியாவுக்கு வாழ்த்துகள். இதற்கு ரோகித் சர்மா முழுவதுமாக தகுதியானவர். அவர் அற்புதமான தலைவர். விராட் கோலி எப்போதுமே பெரிய போட்டிகளில் அசத்தக்கூடியவர். ஜஸ்பிரித் பும்ரா தற்சமயத்தில் உலகின் சிறந்த பவுலர் என்பதில் சந்தேகமில்லை. தென் ஆப்பிரிக்காவுக்கு துரதிர்ஷ்டம். இருப்பினும் தொடர் முழுவதும் அவர்கள் அற்புதமாக விளையாடினார்கள்" என்று கூறினார்.

இது பற்றி வக்கார் யூனிஸ் கூறியுள்ளது பின்வருமாறு. "மகத்தான வீரர்கள் அழுத்தமான சூழ்நிலையில்தான் எழுவார்கள். விராட் கோலி அற்புதமான இன்னிங்ஸ் விளையாடினார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஜஸ்ப்ரித் பும்ராவின் 2 ஓவர்கள் தான் அனைத்தையும் மாற்றியது. அவர் தரமான உலகக்கோப்பை வின்னர். இந்தியா மற்றும் ரோகித் சர்மாவுக்கு வாழ்த்துகள்" கூறினார்.

இது பற்றி ஷாஹீன் அப்ரிடி பதிவிட்டுள்ளது பின்வருமாறு:-"அற்புதமான சர்வதேச டி20 கெரியருக்கு சிறப்பான முடிவு விராட் கோலி. டி20 உலகக்கோப்பை இந்தியா வென்றதற்காக வாழ்த்துகள். உங்கள் இருவருக்கும் (ரோகித், விராட்) அற்புதமான டி20 கெரியருக்காக வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.

இது போக மேலும் சில பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவை வாழ்த்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com