ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்; 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 40 ரன்கள் முன்னிலை

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

கிறைஸ்ட்சர்ச்,

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் வெலிங்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 172 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து ஆஸ்திரேலியாவின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

வெறும் 45.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் டாம் லதாம் 38 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 5 விக்கெட், ஸ்டார்க் 3 விக்கெட், கேமரூன் க்ரீன், கம்மின்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து 2ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 68 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 256 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக லபுஸ்சாக்னே 90 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய மேட் ஹென்றி 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 94 ரன்கள் பின்னிலையுடன் நியூசிலாந்து தனது 2வது இன்னிங்சை ஆடியது.

நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக வில் யங் மற்றும் டாம் லதாம் களம் இறங்கினர். இதில் வில் யங் 1 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து வில்லியம்சன் லதாமுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

இதில் வில்லியம்சன் 51 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து ரச்சின் ரவீந்திரா களம் இறங்கினார். இறுதியில் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்து 40 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நியூசிலாந்து தரப்பில் லதாம் 65 ரன்னுடனும், ரவீந்திரா 11 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நாளை 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com