உச்சத்துக்கு செல்லப்போகும் பெண்கள் வேலைவாய்ப்பு!


உச்சத்துக்கு செல்லப்போகும் பெண்கள் வேலைவாய்ப்பு!
x

ஓசூரில் ஒரு கார் கம்பெனியில் நூறு சதவீதம் பெண்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

இன்று உலக மகளிர் தினம். இன்று நேற்றல்ல, தமிழ்நாடு எப்போதுமே பெண்கள் முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்டி வருகிறது. தந்தை பெரியார் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய, "பெண் ஏன் அடிமையானாள்?" என்ற நூல் பெண்களிடையே மட்டுமல்லாமல், சமுதாயத்திலும் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. பெண் கல்விக்கு அனைத்து தலைவர்களும் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். பெண்கள் படித்துவிட்டால் மட்டும் போதாது, அவர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கவேண்டும் என்ற சீரிய நோக்கில், கலைஞர் கருணாநிதி, அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீட்டை பெண்களுக்கு கொண்டுவந்தார். ஆனால், பெண்கள் தங்கள் திறமையினால் அதையும் தாண்டி, பொது போட்டியிலும் அதிக இடங்களைப்பெற்று வருகிறார்கள்.

கடந்த ஆண்டு துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு பதவிகளுக்கான குரூப்-1 பணிகளில் 65 இடங்களுக்கு தேர்வு நடந்தது. அதில், 40-க்கும் மேற்பட்ட இடங்கள் பெண்களுக்கு கிடைத்தது. சமீபத்தில் வெளியிடப்பட்ட குரூப்-2 தேர்வு முடிவில், முதல் 13 இடங்களை பெண்கள் பெற்றுள்ளனர். அரசு பணிகளில் மட்டுமல்லாமல், தனியார் நிறுவனங்களிலும் பெண்கள் அதிக வேலைவாய்ப்பை பெறும் காலம் வந்துவிட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துவரும் முயற்சியால், தமிழ்நாட்டில் நிறைய முதலீடுகள் வர இருக்கிறது. கடந்த மாதம் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6.6 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதன்மூலம் 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

ஏற்கனவே, ஓசூரில் ஒரு கார் கம்பெனியில் நூறு சதவீதம் பெண்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இந்த நிலையில், பெண்களுக்கான வேலைவாய்ப்பை மேலும் அதிகரிக்கும் பொருட்டு, ஒரு சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டை சேர்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் போன்ற 500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்கும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு, அவர்களின் ஊதியத்தில் 10 சதவீதம் ஊதிய மானியம் 2 ஆண்டுகளுக்கு அரசால் வழங்கப்படும் என்ற அறிவிப்பு, பெண்களுக்கான வேலைவாய்ப்பு கதவுகளை திறந்துள்ளது. இதுபோல, பணிபுரியும் மகளிருடைய குழந்தைகளுக்காக அனைத்து சிப்காட் தொழிற்பேட்டைகளிலும் குழந்தைகள் காப்பகங்கள் தொடங்கப்படும். மகப்பேறு, திருமணம் போன்ற காரணங்களால் பணியில் இடைநிற்க நேரிட்டு மீண்டும் வேலைக்கு செல்ல விரும்பும் பெண்களுக்கு தேவையான தனித்திறன் பயிற்சி அளிப்பதற்கான புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், கோயம்புத்தூர், மதுரை நகரங்களில் தொடங்க இருக்கும் உலகளாவிய திறன் மேம்பாட்டு மையங்களில் ரூ.1 லட்சத்துக்கு மேல் மாத ஊதியத்துடன் உருவாக்கப்படும் வேலைகளுக்கு, முதலாண்டு 30 சதவீதம், 2-ம் ஆண்டு 20 சதவீதம், 3-ம் ஆண்டு 10 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் வெளியிட்ட தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024-ல், "பெண்கள் அதிக ஊதியம் பெறும் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு டிஜிட்டல் கல்வியறிவை ஊக்குவித்து பாலின இடைவெளி குறைக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அறிவிப்புகளால், பெண்களுக்கான வேலைவாய்ப்பு பெருகி தாய்குலத்துக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலம் அலை அலையாய் வர இருக்கிறது. தமிழ்நாட்டில் பெண்கள் முன்னேற்றம் பீடுநடையில் செல்லப்போகிறது.


Next Story