பொழுதுபோக்கு செயலிகளில் மூழ்கி கிடக்கும் இளம்பிஞ்சுகள்!


பொழுதுபோக்கு செயலிகளில் மூழ்கி கிடக்கும் இளம்பிஞ்சுகள்!
x

ஆய்வில் பங்கேற்ற பெற்றோரில் 60 சதவீதம் பேர் தங்கள் குழந்தைகள் தினமும் 3 மணி நேரம் பொழுதுபோக்கு செயலிகளைப் பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளனர்.

இப்போதெல்லாம் 3 வயது குழந்தை கூட செல்போனிலேயே மூழ்கிக் கிடக்கும் காட்சியை பல குடும்பங்களில் பார்க்க முடிகிறது. சில பெற்றோர், தங்கள் குழந்தைகள் வீடுகளில் தொந்தரவு செய்யாமல் இருக்க செல்போனை கையில் கொடுத்து விடுகிறார்கள். செல்போனில் இப்போதுள்ள இளம் பிஞ்சுகளுக்கு தெரியாத செயலிகளே இல்லை.

கொரோனா காலத்தில் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்ட நேரம் 'ஆன்லைன்' மூலம் வகுப்புகள் நடந்த நிலையில், எல்லோருமே செல்போன்களை நன்றாக கையாளத் தொடங்க பழகிவிட்டனர். இப்போது, மாணவர்கள் ஓய்வு நேரங்களில் 'இண்டர்நெட்' பார்க்கும் பழக்கம் மிகவும் அதிகமாகிவிட்டது. சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில், நகர்ப்புறங்களில் வாழும் இத்தகைய இளைய சமுதாயத்தினர் இசை கேட்பது, வீடியோ கிளிப்புகளை பார்ப்பது, சமூக வலைதளங்கள் மூலம் நண்பர்களுக்கு செய்தி அனுப்புவது, 'வீடியோ கேம்' விளையாடுவது, ஆகியவற்றை 'இண்டர்நெட்' மூலம் செய்துகொண்டு இருப்பதில் அதிகமான நேரத்தை கழிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பழக்கங்களுக்கு அவர்கள் அடிமையாகிவிட்டதால், அவர்களின் பழக்க வழக்கங்களே மாறிவிட்டது. பொறுமையின்மை, ஆத்திரம், பரபரப்பு, படிப்பில் தீவிர கவனம் செலுத்த முடியாமை, ஞாபக சக்தி குறைவு, தலைவலி, கண் மற்றும் முதுகுவலி, மனஅழுத்தம், சோர்வு போன்ற பல சங்கடங்களில் கஷ்டப்படுகிறார்கள்.

தங்கள் குழந்தைகள் செல்போனிலோ, லேப்-டாப்பிலோ, டேப்லெட்லிலோ என்னென்ன செயலியை பார்க்கிறார்கள்? என்பதே பல பெற்றோருக்கு தெரியாத நிலை இருக்கிறது. 9 வயது முதல் 17 வயது வரையிலான சிறுவர்கள், சிறுமிகள் தினமும் இண்டர்நெட்டில் எவ்வளவு நேரம் சமூக வலைதளங்களைப் பார்க்கிறார்கள்? எவ்வளவு நேரம் வீடியோ பார்க்கிறார்கள்? எவ்வளவு நேரம் ஓடிடியில் படம் பார்க்கிறார்கள்? எவ்வளவு நேரம் ஆன்லைன் விளையாட்டுகளில் செலவிடுகிறார்கள்? என்று இந்தியா முழுவதிலும் உள்ள 296 மாவட்டங்களில், நகர்ப்புறங்களில் வசிக்கும் 46 ஆயிரம் பெற்றோரிடம் நடத்திய ஆய்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, அவர்கள் அளித்த பதில் அதிர்ச்சியை அளித்துள்ளது. ஆய்வில் பங்கேற்ற பெற்றோரில் 60 சதவீதம் பேர் தங்கள் குழந்தைகள் தினமும் 3 மணி நேரம் இதுபோல செயலிகளைப் பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளனர். பலர் தங்கள் குழந்தைகள் வீடியோ பார்க்கிறார்கள். யூ-டியூப்பும் பார்க்கிறார்கள். ஓடிடியில் பிரைம் வீடியோ, நெட்பிலிக்ஸ், ஹாட் ஸ்டார் பார்க்கிறார்கள் என்றும், இன்னும் சிலர் இன்ஸ்ட்ராகிராம், வாட்ஸ்-அப் போன்ற செயலிகளை பார்க்கிறார்கள் என்றும் கூறியுள்ளனர்.

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில், இதுபோல இணைய தளங்களால் இளம்வயதினருக்கு அவர்கள் அறிவை விசாலமாக்கும் பல பகுதிகள் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. அதே நேரத்தில், படிக்க வேண்டிய வயதில் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும். இந்த ஆய்வில் கலந்துகொண்ட 73 சதவீத பெற்றோர், இந்த வயதினர் குறிப்பாக 9 வயது முதல் 17 வயது வரை உள்ளவர்கள் சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கவும் வீடியோ, ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடவும், ஓடிடி பார்க்கவும் பெற்றோரின் ஒப்புதலை பெறுவது கட்டாயமாக்கப்படவேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

சிலர் குறைந்தபட்ச வயதாக 15-ஐ நிர்ணயிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். ஆனால், அரசு கட்டுப்பாடு கொண்டுவருவதன் மூலம் மட்டும் இந்த விவகாரத்துக்கு ஒரு தீர்வு காணமுடியாது. வீடுகளில் பெற்றோரின் கண்காணிப்பும் இருக்கவேண்டும். குழந்தைகளுக்கு நல்ல அறிவுரையும் வழங்கவேண்டும்.


Next Story