தாராவியில் பயங்கர தீ விபத்து

தாராவி கமலா நகரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக 90 அடி சாலை மூடப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாராவியில் பயங்கர தீ விபத்து
Published on

மும்பை, 

தாராவி கமலா நகரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக 90 அடி சாலை மூடப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தீ விபத்து

மும்பை தாராவி கமலாநகர் பகுதியில் 3 மாடி கொண்ட கட்டிடம் ஒன்றில் ஆயத்த ஆடை, பேக்கரி மற்றும் குடோன் உள்ளது. இந்த கட்டிடத்தில் நேற்று அதிகாலை 4.22 மணி அளவில் கீழ் தளத்தில் உள்ள மின்வயர்களில் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மற்ற இடங்களுக்கும் பரவி கரும்புகையுடன் கொழுந்துவிட்டு எரிந்தது.

அதிகாலை வேளையில் நடந்த தீ விபத்து காரணமாக பலர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை உஷார்படுத்தி வெளியேற செய்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து காரணமாக தாராவியின் முக்கிய பகுதியான 90 அடி சாலை மூடப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் போக்குவரத்து போலீசார் வாகனங்களை சந்த் ரோகிதாஸ் மார்க் வழியாகவும், டி-ஜங்ஷனில் இருந்து ரகிஜே மாகிம் வழியாகவும் திருப்பி விட்டனர். இதற்கிடையே அங்கு பற்றிய தீயை வீரர்கள் போராடி காலை 8 மணி அளவில் முற்றிலும் அணைத்தனர். தீ விபத்தினால் அங்கிருந்த பொருட்கள் கருகி நாசமானது. தீ விபத்தில் அதிஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாராவியில் நடந்த தீ விபத்து காரணமாக சாலை போக்குவரத்து மூடப்பட்டதால் காலை வேளையில் அலுவலகம் செல்வோர் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com