

பலத்த பாதுகாப்பு
நாடு முழுவதும் இன்று குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். அப்போது, அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொள்கிறார்.
இதையொட்டி, நேற்று காலையில் ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு அருணாச்சலம் தலைமையில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
குடியரசு தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலியாக வழக்கத்தைவிட கூடுதலாக பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. திண்டுக்கல், பழனி, கொடைரோடு உள்பட அனைத்து ரெயில் நிலையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடமைகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. மோப்ப நாய் மூலம் வெடிகுண்டு நிபுணர்களும் ரோந்து சென்று வருகிறார்கள்.
கூடுதல் போலீசார்
மாநிலம் முழுவதும் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டங்கள் எதிரொலியாக கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி, திண்டுக்கல்லில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த கல்லறை தோட்டம் பகுதி தொடர்ந்து போலீசாரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு ஏராளமான போலீசாரும் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
இது குறித்து தனிப்பிரிவு போலீசார் கூறும்போது, குடியரசு தினத்தையொட்டி, திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அந்தந்த போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இதே போல தலைவர்களின் சிலைகளுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க தீவிர ரோந்து பணியில் ஈடுபடும்படி போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றனர்.