"ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் வசதி": நெல்லை த.வெ.க. வேட்பாளர் ஆர்.எஸ்.முருகன் வாக்குறுதி

ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுப்பேன் என்று நெல்லை சட்டமன்ற தொகுதி த.வெ.க. வேட்பாளர் ஆர்.எஸ்.முருகன் பேசினார்.
த.வெ.க. வேட்பாளர் ஆர்.எஸ்.முருகன் பிரசாரம்
த.வெ.க. வேட்பாளர் ஆர்.எஸ்.முருகன் பிரசாரம்
Published on

நெல்லை சட்டமன்ற தொகுதி த.வெ.க. வேட்பாளராக ஆர்.எஸ்.முருகன் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் பல்வேறு பகுதிகளில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்களிடம் விசில் சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்து வருகிறார்.

அவர் நேற்று கங்கைகொண்டான் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆலடிப்பட்டி, துறையூர், கரிசல்குளம், ராஜபதி, பாப்பான்குளம், அணை தலையூர், பூங்கனூர், வடகரை பகுதியிலும், நெல்லை டவுன் கீழரதவீதி, மேல ரதவீதி, தெற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி, வாகையடி முனை, சந்திப்பிள்ளையார் முக்கு, லாலா சத்திரமுக்கு, போத்தீஸ் கார்னர் உள்பட அனைத்து வார்டுகளிலும் பிரசாரம் மேற்கொண்டார்.

அவர் விசில் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்து பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

தேர்தலில் வெற்றி பெற்றால் கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைத்து தருவேன்.

2-ம் நிலை மருத்துவமனை

கங்கைகொண்டான் சிப்காட் சந்திப்பில் ஏராளமான விபத்துகள் நடக்கின்றன. படுகாயமடைந்தவர்கள் சிகிச்சை பெற நெல்லை ஐகிரவுண்டு அரசு தலைமை மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டி உள்ளது. ஆம்புலன்சும் நேரத்திற்கு வர முடியவில்லை.

எனவே உயிரிழப்பை தவிர்க்க சாலையை கடக்கும் வழிகளை முறையாக சீரமைத்து அந்தப் பகுதியில் விபத்து ஏற்படும்போது அவர்களை உடனே சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவும் இரண்டாம் நிலை மருத்துவமனை அந்தப் பகுதியில் அமைத்து தர நடவடிக்கை எடுப்பேன்.

தொகுதியில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் என் சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வசதி செய்து தருவேன். நெல்லை அரசு பஸ் நிலையத்தில் பயணிகள் ஏ.சி. காத்திருப்பகம் அமைத்து தருவேன்.

நெல்லை-தென்காசி ரிங் ரோடு வேலையை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன். பெண்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடத்தப்படும்.

டவுன் சன்னதி தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்பு, கழிவு நீர் சாலையோரம் தேங்குதல் உள்ளிட்ட பிரச்சினைகள் அதிகம் உள்ளன.

ஆதரவற்றோருக்கு தொழில் பயிற்சி

கடந்த ஆட்சி காலத்தில் இந்த பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். பாதாள சாக்கடை குழாய் உடைப்பு காரணமாக சாலைகள் பழுதடைந்து அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

பாதாள சாக்கடை பழுதுகளை சரி செய்து சாலைகளை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுப்பேன். தொகுதியில் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் தொழில் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுப்பேன்.

ஏழை, எளிய பெண்களுக்கு தையல் பயிற்சி மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களை வழங்க நடவடிக்கை எடுப்பேன். நெல்லையப்பர் கோவில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பேன்.

சன்னதி தெருவில் உள்ள தெருவோர வியாபாரிகளின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பேன். தெருக்களில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பேன்.

முதன்மை தொகுதி

பல தலைமுறைகளாக இங்கு தொழில் செய்து வரும் பூக்கடைகள், புத்தகக் கடைகள் மற்றும் இதர சிறு வியாபாரிகள் வாழ்வாதார பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்.

நெல்லை தொகுதியை தமிழகத்திலேயே முன்னோடி முதன்மை தொகுதியாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன். மற்ற எம்.எல்.ஏ.க்கள் போல் அல்லாமல் உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருந்து மக்கள் பணிகளை நிறைவேற்றுவேன்.

அதற்கு நீங்கள் வெற்றி சின்னமாம் விசில் சின்னத்தில் வாக்களித்து என்னை அமோக வெற்றி பெறச் செய்யுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com