

தென்காசி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் டாக்டர் கலை கதிரவன் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் கடையநல்லூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளான துரைச்சாமியாபுரம், ஏ.டி. காலனி, ரெட்டைகுளம், சீனிவாச காலனி, பூப்பாண்டியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றிய பொறுப்பாளர் ஜெயா அய்யயப்பன் முன்னிலையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வேட்பாளர் கலை கதிரவனின் சொந்த கிராமமான சுப்பையாபுரம் கிராமத்தை ஒட்டிய பகுதிகள் என்பதால் ஒவ்வொரு பகுதிக்கும் வேட்பாளர் செல்வதற்கு முன்பு ஆண்கள், பெண்கள் என பலரும் திரண்டு நின்று மலர் தூவியம், ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
மேலும் அந்த பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பொதுமக்கள் விவசாய நிலங்களை ஒட்டி அமைந்துள்ள நீர் நிலைகள் அனைத்தையும் முழுமையாக தூர்வார வேண்டும். தெருக்களில் தரமான சாலை வசதிகள் அமைத்து கொடுப்பதோடு, நிரந்தர குடிநீர் சேவைகளையும் பூர்த்தி செய்யும் வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் முக்கிய தலைவர்கள் காமராஜர், முத்துராமலிங்க தேவர், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் உருவ சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முன்னதாக நேற்று குற்றாலம் அருகே நன்னகரம் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாலையில் சுரண்டை நகரத்திற்கு உட்பட்ட பகுதிகளான முப்புடாதி அம்மன் கோவில் தெருவில் பிரசாரம் மேற்கொண்டார். சுரண்டையில் உள்ள காமராஜர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்பு யூனியன் பள்ளி அருகே பிரசாரம் மேற்கொண்ட நிலையில் சுரண்டையில் உள்ள அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அழகு பார்வதி அம்மன் கோவில் ஏழு சமுதாய நிர்வாகிகளை சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டினார்.
கோட்டை தெரு, சந்தை பஜார் வழி, ஜேம்ஸ் வீடு வழி, வரகுணராமபுரம் கோவில், பொட்டல் மாடசாமி கோவில் வழி, பதினாறாவது வார்டு தெரு, மெயின் பஜார், அண்ணா நகர், ஆலடிப்பட்டி, ஆனைகுளம், பாபநாசபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் வீதி, வீதியாக நடந்து சென்று சுரண்டை நகர தி.மு.க. பொறுப்பாளர் கணேசன் முன்னிலையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பிரசாரத்தின் போது வேட்பாளர் கலை கதிரவன் பேசுகையில், நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. உங்கள் பகுதியை சேர்ந்தவன். வாக்காளர்களாகிய நீங்கள் அளிக்கும் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும். தோல்வி பயத்தில் தன்னை வெளியூர்காரன் என கூறிவரும் வேட்பாளர்களை கண்டுகொள்ளாமல் உங்கள் அண்ணனாக, உங்களது தம்பியாக, உங்கள் உறவினராக, உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து எனக்கு உதயசூரியன் சின்னத்தில் அனைவரும் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் மேலும் தி.மு.க. வேட்பாளர் கலைகதிரவன் பேசுகையில், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியவாறு அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். நான் என்றும் உங்களுடனே இருந்து மக்களுக்கு சேவையாற்றுவேன். அனைத்து கோரிக்கைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றுவேன் என்றார். என்றார்.
பொட்டல் மாடசாமி கோவில் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற பொழுது அங்கே குழுமியிருந்த சிறுமிகள் ரோஜா பூ மற்றும் மலர்மாலைகளை வழங்கி உற்சாகத்துடன் வரவேற்றனர். மேலும் கட்சியின் நிர்வாகிகள் சேர்ந்து வேட்பாளர் டாக்டர் கலை கதிரவனுக்கு ஒரு முழு பலாப்பழத்தை வழங்கினர்.
பிரசாரத்தில் சுரண்டை நகர்மன்ற தலைவர் வள்ளி முருகன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் பழனி சங்கர், மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, தமிழ் புலிகள் கட்சி உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோருடன் இணைந்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அரசு மீண்டும் அமையும் பொழுது தென்காசி தொகுதியில் மேம்படுத்த வேண்டிய திட்டப்பணிகள் அனைத்தையும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் செயல்படுத்தி கொடுப்பார். மகளிர்காண உதவித்தொகை ரூ.2000 வழங்க உள்ளதாகவும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.8000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்பட உள்ளதாகவும், 5 ஆண்டுகால தி.மு.க. அரசின் சாதனை குறித்தும் எடுத்து கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.