

சென்னை,
வேணு சீனிவாசன் குடும்பச் சொத்துகளை முறையாகப் பிரித்து வழங்க லட்சுமி வேணு கோரிக்கை விடுத்துள்ளார்.
டி.வி.எஸ். குடும்பத்தின் வேணு சீனிவாசன் பிரிவுக்குச் சொந்தமான கூட்டுக் குடும்பச் சொத்துகளை முறையாகப் பிரித்து வழங்க வேண்டும் என்று டாக்டர் லட்சுமி வேணு கோரியுள்ளார். தனது தந்தையும், குடும்பத் தலைவருமான வேணு சீனிவாசனுக்கு அனுப்பியுள்ள சொத்துப் பிரிப்பு அறிக்கையில், அவர் தனது பொறுப்புகளை நிறைவேற்றி, நியாயமான மற்றும் சட்டப்பூர்வமான சொத்துப் பிரிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
1956-ம் ஆண்டின் இந்து வாரிசுரிமைச் சட்டத்தின்படி (2005-ல் திருத்தப்பட்டது), கூட்டுக்குடும்பச் சொத்தில் தனக்குரிய பங்கைப்பெற தனக்கு முழு உரிமை உண்டு என்றும், அந்தச் சொத்துகளைப் பிரித்து வழங்கக் கோருவதற்குத் தனக்குத் தனிப்பட்ட உரிமை உள்ளது என்றும் டாக்டர் லட்சுமி வாதிடுகிறார். மேலும், இந்த சட்டத்தின் 6-வது பிரிவின் கீழ், மகள்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம உரிமைகளின் அடிப்படையிலும் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
டாக்டர் லட்சுமி வேணு பிரித்து வழங்கக் கோரும் சொத்துகளில், 'வி.எஸ். டிரஸ்ட்' மற்றும் பிற முதலீட்டு அமைப்புகள் மூலம் குடும்பத்தினர் கொண்டுள்ள சொத்துகள் அடங்கும். 2020-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட டி.வி.எஸ். குடும்ப ஒப்பந்தத்தின்படி, வேணு சீனிவாசன் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட வணிகங்கள் மற்றும் சொத்துகள் இதில் உள்ளடங்கும். குறிப்பாக, டி.வி.எஸ். ஹோல்டிங்ஸ், டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி, டி.வி.எஸ். கிரெடிட் சர்வீசஸ் மற்றும் சுந்தரம்-கிளேட்டன் ஆகிய நிறுவனங்களில் உள்ள பங்குகள் இதில் அடங்கும்.
டி.வி.எஸ். குடும்பத்தின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பு, வேணு சீனிவாசன் குடும்பத்திற்குள் ஒரு சொத்துப் பிரிவினையாகக் கருதப்பட முடியாது என்று டாக்டர் லட்சுமி வாதிடுகிறார். அவருடைய நேரடி குடும்பத்திற்குள் சொத்துகளைப் பிரிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் தொடங்கப்படவில்லை.
எனவே, அத்தகைய பிரிவினை நிறைவு பெற்றிருக்கவும் வாய்ப்பில்லை. நிர்வாகப் பொறுப்பில் இருப்பது என்பது, ஒருவருக்கு மட்டுமே முழு உரிமையையும் வழங்குவதாகவோ அல்லது குடும்பத்தின் பிற உறுப்பினர்களுக்குச் சட்டப்படி உள்ள உரிமைகளை ரத்து செய்வதாகவோ ஆகாது என்பது அவரது நிலைப்பாடு.
கூட்டுக்குடும்பச் சொத்தில் தனக்குச் சேர வேண்டிய பங்கினை, அநீதியான முறையில் தமக்கு மறுப்பதாக டாக்டர் லட்சுமி குற்றம் சாட்டுகிறார். தனது சகோதரருக்குச் சாதகமாகச் சொத்து உரிமைகள் அனைத்தும் குவிக்கப்பட்டிருப்பதன் மூலம், சட்டப்படி தனக்குள்ள உரிமைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
இத்தகைய செயல்களை அவர் சட்ட மீறலாக மட்டுமின்றி, நம்பிக்கைத் துரோகமாகவும் கருதுகிறார். சட்டத்திலோ அல்லது முன்னேறி வரும் இந்தியாவிலோ ஆணாதிக்கத்திற்கு இடமில்லை. கூட்டுக்குடும்பச் சொத்தில் மகள்களுக்கு உள்ள உரிமைகளை, ஒருதலைபட்சமான முடிவுகள் மூலமோ அல்லது நிறுவனக் கட்டமைப்புகள் மூலமோ பறிக்க முடியாது என்று அவர் வலியுறுத்துகிறார்.
டாக்டர் லட்சுமி, இணக்கமான மற்றும் சமத்துவமான தீர்வின் மீதான தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் உரிமைகளுக்கும் மதிப்பளிக்கும் வகையிலும், கண்ணியத்துடனும் நியாயத்துடனும் இந்த விவகாரம் தீர்க்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேபோல், குடும்பச் சொத்துகளில் டாக்டர் லட்சுமி வேணுவுக்கு உள்ள நியாயமான உரிமையை ஆதரிக்கும் மல்லிகா சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுமுகமான தீர்வுக்கான கோரிக்கைகள் இதுவரை அர்த்தமுள்ள வகையிலும், உரிய காலத்திலும் முன்னேறவில்லை என்பது வருத்தமளிக்கிறது. ஒரு தாயாக, என்னைப் பொறுத்தவரை, மகனும் மகளும் எல்லா வகையிலும் சமமானவர்களே. குடும்பச் சொத்துகளில் சுதர்ஷனுக்கு உள்ள பங்கிற்குச் சமமான, நியாயமான பங்கு லட்சுமிக்கும் உண்டு என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
சம்பந்தப்பட்ட அனைவரும் பயனடையும் வகையில், வெளிப்படையான உரையாடல் மூலமாகவும், சமத்துவம், தெளிவு மற்றும் நல்லிணக்கத்துடனும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். கண்ணியத்துடனும் கௌரவத்துடனும், ஆக்கபூர்வமான முறையில் நாம் முன்னேற முடியும் என்று நான் மனதார நம்புகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.