

திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தி.மு.க வேட்பாளராக அனிதா ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று தீவிர ஓட்டு வேட்டை நடத்தி வருகிறார். கொட்டங்காடு பகுதியில் ஓட்டு சேகரித்தபோது அவர் பேசியதாவது:-
கடந்த 5 ஆண்டுகளில் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி அனைத்து தரப்பு மக்களிடம் சென்றடைந்துள்ளது. கொரோனா, புயல், மழை போன்ற இயற்கை சீற்றத்தில் திறம்பட செயலாற்றியவர் திராவிட மாடல் முதல்வர் தொழில் வளத்தில் தமிழகம் இந்தியாவில் சிறந்து விளங்கி வருகிறது.
பா.ஜனதா இந்தியாவில் பல மாநிலங்களில் பல்வேறு சதி செய்தி ஆட்சியை பிடித்தது. ஆனால் தமிழகத்தில் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு அனைத்து தேர்தல்களிலும் தோல்விதான்.
தமிழகத்தை பொறுத்தவரை பெரியார், அண்ணா, கலைஞர் போராடி வென்ற திராவிட அரசை வீழ்த்த பா.ஜனதாவின் மறைமுக ஆதரவினால் களம் இறக்கப்பட்டவர்தான் நடிகர் விஜய். இது போன்ற சதிகளை எல்லாம் தமிழக மக்கள் முறியடிப்பார்கள்.
தமிழக இளைஞர்கள் நமது வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். ஜாதி, மதங்களை கடந்து திராவிடத்தை காக்க பா.ஜனதாவின் சதியை முறியடிக்க அனைவரும் ஒன்றிணைந்து இந்த தேர்தலில் தி.மு.க., கூட்டணியை ஆதரிக்க வேண்டும. சிறுபான்மை, மீனவ இளைஞர்களை திசை திருப்ப ஆசை காட்டி வருகின்றனர். இந்த சமுதாய மக்களுக்கு தி.மு.க அரசு செய்த திட்டப் பணிகள் ஏராளம்.
தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க அரசு இருந்தால்தான் ஜாதி, மத மோதல் இல்லாமல் அமைதியாக இருக்கும். ஒற்றுமையாக இருக்கும் மக்களிடம் பிரிவு ஏற்படுத்த நடந்து வரும் சதிகளை முறியடிக்க வேண்டும். தமிழகம் என்றும் திராவிட பூமி என்பதை நிரூபிக்க வேண்டும். நான் கடந்த 25 ஆண்டுகளாக இந்த தொகுதியில் மக்கள் பணியாற்றி வருகிறேன். எனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியை, தொகுதி முழுவதும் பரவலாக வழங்கி பள்ளி கட்டிடம், அங்கன்வாடி கட்டிடம், மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி, ரோடு, தெரு விளக்கு போன்ற மக்கள் நலத்திட்ட பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்து. எனது சொந்த நிநியில் இருந்து தொகுதி முழுவதும் ஏராளமான கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தியுள்ளேன். ஏராளமான மாணவர்களுக்கு மேற்படிப்பு படிப்பதற்கு பல்வேறு உதவிகள் செய்துள்ளேன். எனது சொந்த செலவில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு இருதய அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளேன்.
திருச்செந்தூர் தொகுதி மக்கள் என்னை அவர்களின் குடும்பத்தில் ஒருவனாக நினைக்கிறார்கள். நான் எப்போதும் தொகுதி வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறேன். உடன்குடி பகுதியில் கருப்பு கட்டி மற்றும் கற்கண்டு உற்பத்தி ஊக்குவிக்கவும், உலக சந்தையில் நல்ல விலை கிடைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளேன். எந்தனை சதி செய்தாலும் என்னையும் தொகுதி மக்களையும் பிரிக்க முடியாது. தொகுதி மக்களுக்கு பணி செய்திட எனக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.
மக்கள் ஆதரவோடு மீண்டும் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு அமைந்தவுடன் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இதில் விடுபட்ட மகளிர் அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும்.
இல்லத்தரசிகளுக்கு ரூ.8 ஆயிரத்துக்கு கூப்பன் வழங்கப்படும். இந்த கூப்பன் மூலம் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். மகளிர் விடியல் பயணம் தொடரும். கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1000 வங்கி கணக்கில் செலுத்தப்படும். கல்லூரி மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டமும் தொடரும். ஊனமுற்றோர் உதவித்தொகை ரூ.2500, கடுமையாக பாதிக்கப்பட்ட ஊனமுற்றோருக்கு ரூ.4 ஆயிரம், முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை ரூ.2000, புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டம் ரூ.1000-ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுவினர், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு நலத்திட்டங்களை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு விரைவில் கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் உமரி சங்கர், மாவட்ட பெருளாளர் ராமநாதன், உடன்குடி நகர தி.மு.க செயலாளர் மால் ராஜேஷ், உடன்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் பாலசிங், உடன்குடி பேரூராட்சி தலைவர் ஹீமைரா, உடன்குடி டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர்கள் ஜாண் பாஸ்கர், அஸ்ஸாப், பாலாஜி, மும்தாஜ் பேகம், பசீர், பிரதீப் கண்ணன், ராஜேந்திரன், ஆபித், சரஸ்வதி பங்காளன், மாவட்ட பிரதிநிதிகள் சிராசுதீன், மதன்ராஜ், ஹீயுபர் மோசஸ், மாநில காங்கிரஸ் பொதுக் குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன், உடன்குடி வட்டார தலைவர் துரைராஜ் ஜோசப், நகர தலைவர் முத்து, மனிதநேய மக்கள் கட்சி மாவாட்ட செயலாளர் பரக்கத்துல்லா, மாவட்ட வி. சி. க. செயலாளர் விடுதலை செழியன், ஆட்டோ கணேசன், குலசை கண்ணன், திரவியம், தங்கம் உட்பட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.