

ஸ்ரீவைகுண்டம்,
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சண்முகநாதன் நேற்று வீதி, வீதியாக பிரசாரத்தில் ஈடுபட்டார்.
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.பி.சண்முகநாதன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அவர் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட மேடைபிள்ளையார் கோவில்தெரு, திருவள்ளுவர் தெரு, பழைய தாலுகா அலுவலகம் சாலை, பஸ் நிலையம், தபால் அலுவலக சாலை, போக்குவரத்து பணிமனை தெரு, தெப்பக்குளத்தெரு, சிவன்கோவில் தெரு, சந்தையடி தெரு, குரூஸ்கோவில் தெரு, கோவில்பத்துதெரு, தெற்கு யாதவர் தெரு, வடக்குயாதவர் தெரு, அம்பலத்தெரு, தெற்கு மற்றும் வடக்கு முத்தாரம்மன் கோவில் தெரு, பெரும்பத்து தெரு, முஸ்லீம் தெரு, மேலகோட்டை வாசல் தெரு, கீழகோட்டைவாசல் தெரு, பிச்சனாத்தோப்பு, பேட்துரைசாமிபுரம், நலன்குடி, பராங்குசநல்லூர், அருந்ததியர்காலணி, மருத்துவர்காலணி, புதுக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து, நேற்று ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட பன்னம்பாறை, வடலி விளை, நகனை, தாய் விளை, வாலிவிளை, பிள்ளை விளை, எழுவரை முக்கி, தோப்பூர், தைலாபுரம், பிடா நேரி, சமத்துவபுரம், டி.கே.எஸ். நகர், ஆனந்தபுரம், பலங்குளம், கருவேலம்பாடு, தேரிப்பனை, அச்சம்பாடு உள்ளிட்ட பகுதிகளில் வீதி, வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.
அப்போது திறந்த வேனில் நின்றவாறு வேட்பாளர் எஸ்.பி. சண்முகநாதன் பேசியதாவது:-
அதிமுக தலைமையிலான கூட்டணி மிகவும் வலுவான கூட்டணி. இந்த தேர்தலில் எதிரணிகளை வீழ்த்தி அதிமுக கூட்டணி கட்சிகள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.
இதேப்போல் அதிமுகவின் தேர்தல் அறிக்கை கதாநாயகனாக இருக்கிறது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக பிரிட்ஜ் வழங்கப்படும். வரிச்சுமை மற்றும் விலைவாசி உயர்வை சமாளிக்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒருமுறை சிறப்பு உதவியாக ரூ.10,000 வழங்கப்படும்.
பெண்களுக்கு இருக்கும் இலவச பஸ் பயண வசதி, ஆண்களுக்கும் விரிவுபடுத்தப்படும். ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும்.
மாணவர்களின் கல்விக்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு 7.5 சதவீதத்தில் இருந்து 10.5 சதவீதமாக உயர்த்தப்படும்,
ஜெயலலிதா வளர்த்த அ.தி.மு.க. கட்சி, மக்களுக்கான கட்சி ஆகும். ஆனால் திமுக ஒரு குடும்பத்திற்காக செயல்படும் கட்சி. திமுக ஆட்சியில் தமிழகம் எவ்வித தொழில் வளர்ச்சியும் அடையவில்லை.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட அ.தி.மு.க.வின் மக்கள் நலத்திட்டங்கள் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் செயல்படுத்தப்படும். ஸ்ரீவைகுண்டம் தொகுதி கடந்த 5 ஆண்டாக வெற்றிடமாக உள்ளது. நான் உள்ளூர் மண்ணின் மைந்தன். எனவே உங்களுடன் உங்களின் ஒருவனாக உங்கள் தேவைகளுக்காக உழைப்பதற்கு எனக்கு மீண்டும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தின்போது, தெற்கு மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், ராஜநாராயணன், பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரை பாண்டியன், வழக்கறிஞர் புவனேஸ்வரன், நகர செயலாளர் காசிராஜன், முன்னாள் நகர செயலாளர் பால்துரை மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.