

ஜல்லிக்கட்டு
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து அவசர சட்டத்தை நிறைவேற்றியது. இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வந்ததால் கடந்த 22-ந் தேதி பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வருகிற 1-ந் தேதியும், பாலமேட்டில் 2-ந் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஜல்லிக்கட்டுக்கான தடைமுழுமையாக நீங்கி உள்ளதால் மாடு வளர்ப்போரும், மாடுபிடி வீரர்களும் உற்சாகமடைந்து உள்ளனர்.
ஜல்லிக்கட்டு காளைகளுக்கு போட்டியில் பங்கேற்கும் வகையில் தற்போது தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நீச்சல்பயிற்சி, மணல்குவியல்களை தனது கொம்புகளால் குத்தி சரிக்கும் ஆக்ரோஷ பயிற்சி, வீரர்களின் பிடியில் இருந்து லாவகமாக தப்பி ஓடும் வகையில் ஓட்டப்பயிற்சி ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் காளைகளின் ஆரோக்கியத்தை பேணும் வகையில் புண்ணாக்கு, பருத்தி கொட்டை, நாட்டு கோழி முட்டை, தேங்காய் பருப்பு மற்றும் சத்தான உணவுகளும் வழங்கப்படுகிறது. தினமும் 3 வேளை பயிற்சிகள் மற்றும் உணவுகள் வழங்கப்படுவதால் காளைகளும் புது உற்சாகத்துடன் காணப்படுகிறது.
அ ல ங் க ந ல் லூ ர், பாலமேட்டில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் பங்கேற்கின்றன. ஜல்லிக்கட்டில் 1000-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும் என தெரிகிறது.
வாடிவாசல்
மேலும் மாடுபிடி வீரர்களும் தங்களை தயார்படுத்தி வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறாததால் தாங்கள் வளர்த்த காளைகளை விற்றுவிட்ட சிலர், தற்போது ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக காளைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜல்லிக்கட்டில் 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு மாடு பிடிக்கிறார்கள்.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் அங்குள்ள கோட்டை முனியசாமி திடலில் வாடிவாசல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பார்வையாளர்களுக்காக கேலரிகள் அமைக்கும் பணியும் தொடங்கி உள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவ, மாணவிகள் அமர்ந்து பார்க்கும் வகையில் தனித்தனி கேலரிகள் அமைக்கப்படுகின்றன. பாலமேட்டில் மஞ்சமலை சாமி ஆற்றுத்திடலில் உள்ள வாடிவாசல் வர்ணம் பூசப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
சிறப்பு பரிசுகள்
போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகின்றன. தங்க காசுகள், வெள்ளி பொருட்கள், பீரோ, கட்டில், மின்விசிறி, சைக்கிள், பாத்திர வகைகள் உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
இதனால் ஜல்லிக்கட்டு களைகட்ட தொடங்கி உள்ளது.