

புதுடெல்லி,
வட இந்தியாவில் சிற்றுண்டி வகையில் 'மோமோஸ்' என்ற உணவு பிரபலமாகும். கொழுக்கட்டை வடிவில் தயாரிக்கப்பட்டும் இந்த மோமோஸ் சைவ, அசைவ உணவாகவும் உள்ளது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியின் திரங்க சவுக் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு ஜிதேந்தர் மோஹ்டோ (வயது 40) என்ற நபர் சாலையோர சிற்றுண்டி உணவகத்தில் 'மோமோஸ்' உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக 18 வயதான இளைஞர் ஒவருவர் (பெயர் வெளியிடபடவில்லை) நடந்து வந்துள்ளார். அந்த இளைஞர் எதிர்பாராத விதமாக சிற்றுண்டி உணவகத்தில் மோமோஸ் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஜிதேந்தர் மீது மோதியுள்ளார்.
இதில், ஜிதேந்தர் சற்று தடுமாறியதால் அவரது கையில் வைத்திருந்த மோமோஸ் கீழே விழுந்துவிட்டது. இதனால், ஜிதேந்தருக்கும் அந்த இளைஞருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு ஜிதேந்தரை சரமாரியாக குத்தியுள்ளார். இதில், ஜிதேந்தர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
இதையடுத்து, ஜிதேந்தரை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், ஜிதேந்தரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜிதேந்தரை கொலை செய்த இளைஞரை கைது செய்தனர்.