பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பாலியல் தொல்லை வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ராஜேஷ் தாஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

Update: 2024-04-29 09:00 GMT

புதுடெல்லி,

கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விழுப்புரத்தில் அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணிக்காக வந்த பெண் எஸ்பி ஒருவருக்கு அப்போது சிறப்பு டிஜிபியாக ராஜேஷ் தாஸ் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அளித்ததாக புகார் எழுந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பெண் எஸ்.பி. புகார் கொடுக்க முயற்சித்தபோது அதனை செங்கல்பட்டு எஸ்பி-யாக இருந்த கண்ணன் தடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விழுப்புரம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் வழக்கு தொடுக்க தாமதப்படுத்தியதற்காக செங்கல்பட்டு எஸ்பி-யான கண்ணனுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

தனக்கு விதிக்கப்பட்ட இந்த தண்டனையை நிறுத்தி வைக்க கோரி ராஜேஷ் தாஸ் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அவர் அப்போது கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அந்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இதையடுத்து அவரை கைது செய்வதற்காக சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்ற போது அவர் அங்கிருந்து தலைமறைவானார். இதனால் அவர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீசை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அனுப்பினர்.

இதற்கு நடுவே, பாலியல் வன்கொடுமை வழக்கில் சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ராஜேஷ் தாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி. எம்.தண்டபாணி முன்னிலையில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.சி.ஐ.டி. தரப்பு வழக்கறிஞர், ராஜேஸ் தாசின் கோரிக்கைகளை ஏற்க கூடாது என வாதிட்டார். "காவல்துறையில் உயர் பதவியில் இருப்பதால், தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கேட்கும் ராஜேஸ் தாஸ், தன்னால் பாதிக்கப்பட்டவரும் போலீஸ் உயரதிகாரி என்பதை மறந்துவிட்டாரா?" என்றும் அவர் கேள்வியெழுப்பினார். இதையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, இந்த வழக்கு விசாரணை ஒத்திவைத்தார்.

இதனையடுத்து கடந்த 23-ம் தேதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ராஜேஷ் தாசுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது என கூறி, விழுப்புரம் கோர்ட்டு விதித்த தண்டனையை உறுதி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் ராஜேஷ் தாஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்