வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை: பா.ஜனதா எம்.பி. தலைமறைவு குற்றவாளியாக அறிவிப்பு

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாவிட்டால், கோர்ட்டு இதுபோன்று அறிவிப்பது பொதுவான நடைமுறைதான் என்று சிறப்பு அரசு வக்கீல் தெரிவித்தார்.

Update: 2022-11-24 01:09 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மக்களவை தொகுதி பா.ஜனதா எம்.பி. அருண்குமார் சாகர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அத்தொகுதி வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது, அனுமதியின்றி விளம்பர பலகைகள், பேனர்கள் வைத்ததாகவும், சுவர் விளம்பரம் செய்ததாகவும் புகார் எழுந்தது.

இதுதொடர்பாக அவர் மீது கந்த் போலீஸ் நிலையத்தில், தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு, ஷாஜகான்பூரில், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் தனிக்கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. கோர்ட்டில் ஆஜராகாததால், அவருக்கு எதிராக கோர்ட்டு வாரண்டு பிறப்பித்தது. அதன்பிறகும் அவர் ஆஜராகாததால், கோர்ட்டு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்தது.

இந்தநிலையில், நேற்று மாஜிஸ்திரேட்டு அஸ்மா சுல்தானா முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அருண்குமார் சாகர் எம்.பி. ஆஜராகவில்லை. இதனால், அவரை 'தலைமறைவு குற்றவாளி' என்று மாஜிஸ்திரேட்டு அறிவித்தார். அருண்குமார் சாகர் வீட்டில் நோட்டீஸ் ஒட்டுமாறு உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாவிட்டால், கோர்ட்டு இதுபோன்று அறிவிப்பது பொதுவான நடைமுறைதான் என்று சிறப்பு அரசு வக்கீல் நீலம் சக்சேனா தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்