குரூப்-4 தேர்வினை 2023 ஆம் ஆண்டிலேயே நடத்த வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

குரூப்-4 தேர்வினை 2023 ஆம் ஆண்டிலேயே நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2022-12-22 08:20 GMT

சென்னை,

டி.என்.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை 2023 ஏமாற்றம் தந்துள்ளது. குரூப்-4 தேர்வினை 2023 ஆம் ஆண்டிலேயே நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையம் வெளியிட்டுள்ள, 2023 தேர்வு அட்டவணை, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிவரும் இளைஞர்களுக்கு பெருத்த ஏமாற்றம் தருவதாக உள்ளது. தமிழ்நாடு அரசு உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு, குறைபாடுகளை நீக்கி, தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றிட வேண்டுமென சிபிஐ(எம்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையில், குரூப் 1, 2, 2ஏ மற்றும் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு அட்டவணை அறிவிக்கப்படவில்லை. மொத்தமாகவே 1754 பணியிடங்கள்தான் நிரப்பப்படும் என்பதாக அந்த அறிவிக்கை தெரிவித்துள்ளது. லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் உள்ள சூழலில், ஓராண்டு காலத்திற்கு புதிய நியமனங்கள் மிக சொற்பமாகவே நடக்கும் என்பது அரசுப் பணிகளை பாதிக்கும், இட ஒதுக்கீட்டு உரிமையை பாதிக்கும் என்பதுடன் வேலை தேடும் இளைஞர்களுக்கு மிகப்பெரும் ஏமாற்றத்தை கொடுக்கும்.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை மீது விமர்சனங்கள் எழுந்ததை தொடர்ந்து, திருத்தம் மேற்கொள்ளப்பட்டு குரூப் 1 பணியிடங்களுக்கான அறிவிக்கை 2023 ஆகஸ்ட் மாதத்தில் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். அதே போல, குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வுகளின் அறிவிக்கையே 2023 நவம்பரில்தான் வெளியாகும், தேர்வுகள் 2024 தான் நடக்கும் என்பதை மாற்றி, 2023 ஆம் ஆண்டிலேயே தேர்வுகள் நடத்த வேண்டும், குரூப் 2 மற்றும் 2ஏ, சிவில் நீதிபதி, உதவி வேளாண்மை அலுவலர் பணிகளுக்கும் அட்டவணை வெளியிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் நடக்கும் போட்டித் தேர்வு பயிற்சிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பான பயிற்சியை பெறுகின்றனர். தேர்வுகளை நடத்தினால்தான் அந்த மாணவர்களுக்கு பணி வாய்ப்பினை வழங்கிட முடியும். எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக இவ்விஷயத்தில் தலையீடு செய்து, அட்டவணையை திருத்தி வெளியிட வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்