

வாஷிங்டன்,
பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூன் மாதம் பருவமழை தொடங்கியது. பல நாட்கள் நீடித்த மழையால் நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒட்டுமொத்த நாட்டில் 3-ல் 1 பங்கு தண்ணீரில் மூழ்கியது
இந்த வெள்ளப்பெருக்கால் 3 கோடியே 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும், இந்த கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 1,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மழை தற்போது குறித்து வெள்ளம் வடியத்தொடங்கியுள்ளது. இதனையடுத்து, நிவாரணப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ அமெரிக்கா சென்றுள்ளார். அவர், ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியையும் சந்தித்தார்.
இதனிடையே, இந்த பயணத்தின் போது தனியார் செய்தி நிறுவனத்திற்கு பிலாவல் பூட்டோ பேட்டியளித்தார். அப்போது, வெள்ள பாதிப்பு நிலவரம், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், எங்கள் நாட்டில் 3-ல் 1 பங்கு தண்ணீரில் உள்ளது. 7-ல் 1 நபர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராட வேண்டுமென நீங்கள் கூறினால், அமெரிக்காவும், சீனாவும் இணைந்து செயல்பட வேண்டும். பருவநிலை மாற்றத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து செயல்பட வேண்டும். இது குறித்து நாம் சிந்திக்க வேண்டும்' என்றார்.