“மூன்வாக்” படக்குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடிய ஏ.ஆர்.ரகுமான்
28 ஆண்டுகளுக்கு பிறகு ‘மூன்வாக்’ படத்தில் ஏ.ஆர்.ரகுமானும், பிரபுதேவாவும் மீண்டும் இணைந்துள்ளார்கள்.;
சென்னை,
தமிழ் திரையுலகில் 1990-களில் 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரகுமான் மற்றும் 'நடனப்புயல்' பிரபுதேவா கூட்டணியில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டன. முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான்-பிரபுதேவா 1994-ம் ஆண்டு 'காதலன்' படத்தின் மூலம் இணைந்தார்கள். 'மின்சார கனவு' படத்துக்கு பிறகு, அதாவது 28 ஆண்டுகளுக்கு பிறகு என்.எஸ்.மனோஜ் இயக்கத்தில் உருவாகும் ‘மூன்வாக்’ என்ற படத்தில் ஏ.ஆர்.ரகுமானும், பிரபுதேவாவும் மீண்டும் இணைந்துள்ளார்கள். 'மூன்வாக்' என்பது 'பாப்' இசை உலகின் மன்னர் என்று போற்றப்படும் மைக்கேல் ஜாக்சனின் உலகப் புகழ் பெற்ற நடன அசைவாகும். இந்த படத்தின் உலகளாவிய திரையரங்க வினியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றி இருக்கிறது.
இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை பிஹைன்வுட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு உரிமையை ‘லஹரி மியூசிக்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. . ‘மூன்வாக்’ படத்தின் வீடியோ பாடல் சமீபத்தில் வெளியானது. ‘மூன்வாக்’ படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வர உள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற, “மூன்வாக்” திரைப்படத்தின் மாபெரும் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. ஏ.ஆர்.ரகுமான் மற்றும் பிரபுதேவா ஆகியோரின் அசத்தலான நிகழ்ச்சிகளுடன், பல நடன மற்றும் பாடல் நிகழ்ச்சிகள் இடம்பெற்றது, ரசிகர் கூட்டத்தை பெரிதும் உற்சாகப்படுத்தியது. “மூன்வாக்” திரைப்படத்தின் ஐந்து பாடல்களையும் தொடர்ச்சியாக நேரடியாகப் பாடி, ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தி, அந்த மாலையை உண்மையான இசை கொண்டாட்டமாக மாற்றினார். பிரபுதேவா, உற்சாகத்துடன் மூன்வாக் திரைப்படத்தின் ஐந்து பாடல்களுக்கும் ஆடி, பிரமாண்டமான 10 நிமிட நடன அஞ்சலியை, ஏ.ஆர்.ரகுமானுக்கு அர்ப்பணித்தார். அவர் யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ் மற்றும் நடன இயக்குநர் சேகர் ஆகியோருடன் இணைந்து மேடையில் நடனமாடி, அந்த இரவை மேலும் கலகலப்பாகவும் உற்சாகமாகவும் மாற்றினார்.
இறுதியாக, பிரபுதேவா, ஏ.ஆர்.ரகுமானை மீண்டும் மேடைக்கு அழைத்து, புகழ்பெற்ற “முக்காலா” பாடலுக்கு அவரை நடனமாட வைத்தார். அதன் பின்னர், மூன்வாக் திரைப்படத்தின் முழு குழுவினரும், ரசிகர்களும் இணைந்து, ஏ.ஆர்.ரகுமானின் பிறந்தநாளை கொண்டாடும் பிரம்மாண்ட கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.