ரூ.30 கோடி மோசடி வழக்கில் பாலிவுட் இயக்குனர் மனைவியுடன் கைது
மோசடி வழக்கில் இயக்குனர் விக்ரம் பாட், அவரது மனைவி தவிர மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;
மும்பை,
மும்பையை சேர்ந்தவர் பிரபல இந்தி சினிமா இயக்குனர் விக்ரம் பாட். இவர் ராஷ், ஸ்பீடு, 1920, மிஸ்டர் எக்ஸ், 1921 உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கி உள்ளாா். இயக்குனர் விக்ரம் பாட் மீது ராஜஸ்தானை சேர்ந்த இந்திரா ஐ.வி.எப். ஆஸ்பத்திரி உரிமையாளர் டாக்டர் அஜய் முர்தியா புகார் ஒன்றை அளித்து இருந்தார்.
அந்தப்புகாரில், படங்கள் எடுப்பதாகக் கூறி இயக்குனர் விக்ரம் பாட் உள்ளிட்ட சிலர் தன்னிடம் ரூ.30 கோடி மோசடியில் ஈடுபட்டதாக கூறியிருந்தார். இந்தப்புகார் குறித்து ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள புபால்புரா போலீசார் இயக்குனர் விக்ரம் பாட் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை மும்பை வந்த ராஜஸ்தான் போலீசார் அந்தேரி யாரிரோடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் இருந்த இயக்குனர் விக்ரம் பாட், அவரது மனைவி ஸ்வேதாம்பரியை கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் மும்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். கோர்ட்டு 2 பேரையும் ராஜஸ்தான் அழைத்துச்சென்று விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி வழங்கியது. முன்னதாக தன் மீதான மோசடி குற்றச்சாட்டை இயக்குனர் விக்ரம் பாட் மறுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.30 கோடி மோசடி வழக்கில் இயக்குனர் விக்ரம் பாட், அவரது மனைவி தவிர மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.