‘சல்மான்கானுடன் நெருங்கி பழகக் கூடாது’- போஜ்புரி நடிகருக்கு தாதா கும்பல் மிரட்டல்
சல்மான்கானுடன் வேலை செய்யக்கூடாது, அவருடன் பழகக்கூடாது இல்லையெனில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று நடிகர் பவன்சிங்கை செல்போனில் பேசியவர் மிரட்டியுள்ளனர்.;
மும்பை,
போஜ்புரி நடிகர் பவன்சிங் நேற்று மும்பை ஓஷிவாரா போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில், தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்தவர்களிடம் இருந்து தனக்கு மிரட்டல் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், அந்த புகார் மனுவில், “இந்தி நடிகர் சல்மான்கானுடன் மேடையை பகிர்ந்து கொள்ளவேண்டாம் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து கடந்த சனிக்கிழமை முதல் தொடர்ந்து எனக்கு மிரட்டல்கள் வந்தன. சல்மான்கானுடன் வேலை செய்யக்கூடாது, அவருடன் பழகக்கூடாது. இல்லையெனில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று செல்போனில் பேசியவர் மிரட்டினார். எனவே, எனக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என கூறப்பட்டு உள்ளது. இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் போட்டியாளர்களில் பவன் சிங் ஒருவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாபி பாடகரும், அரசியல்வாதியுமான சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய், போதைப்பொருள் வழக்கில் குஜராத்தின் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.