கார்த்தி நடித்துள்ள 'வா வாத்தியார்' படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிப்பு

கார்த்தி நடித்துள்ள 'வா வாத்தியார்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2026-01-10 18:39 IST

கோப்புப்படம் 

'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' உள்ளிட்ட படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் ‘வா வாத்தியார்’. இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 'வா வாத்தியார்' படம் கடந்த மாதமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தயாரிப்பாளர் சந்தித்த நிதி வழக்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருந்த விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் தணிக்கை சான்றிதழை பெற்ற சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. பொங்கல் வெளியீடாக பராசக்தி மட்டுமே வெளியான நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு மற்ற படங்களும் திடீரென்று பொங்கல் ரேஸில் குதித்துள்ளன.

அந்த வகையில் கார்த்தியின் 'வா வாத்தியார்' திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 14-ந்தேதி 'வா வாத்தியார்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்